×

உ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கூட்டாளி சிக்கினான்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த வெள்ளியன்று ரவுடியை கைது செய்ய சென்றபோது 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளியை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பிக்ரு கிராமத்தில் சுமார் 60 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி தலைமையிலான போலீசார், கடந்த வெள்ளிக்கிழமை இரவு  அங்கு சென்றனர். அப்போது ரவுடி விகாஸ் துபே கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீசார் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 7 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சகைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாட்டையே இந்த சம்பவம் அச்சத்தில் ஆழ்த்தியது.

இதனைதொடர்ந்து தப்பி சென்ற ரவுடி விகாஸ் துபேவை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 25க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் துபேவை பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். நேபாள எல்லை மற்றும் இதர மாநிலங்களிலும் விகாஸ் துபேவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். விகாஸ்துபேவின் தலைக்கு ரூ.1 லட்சமும் கூட்டாளி அக்னிகோத்ரி தலைக்கு ரூ.25ஆயிரமும் போலீசார் சன்மானமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கான்பூரில் தயாசங்கர் அக்னி கோத்ரி மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பிஓட முயன்ற அக்னிகோத்ரியை காலில் சுட்டு போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றது.

* போலீஸ் நிலையத்தில் போன் மூலம் தகவல்
கைதான அக்னி கூறுகையில், “போலீசார் கைது செய்ய வருவதாக காவல்நிலையத்தில் இருந்து யாரோ ஒருவர் விகாஸ் துபேவுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தான் விகாஸ் துபே தனது ஆதரவாளர்களை வரவழைத்து தாக்குதல் நடத்தினான்” என்றார். சவ்பேபூர் காவல்நிலைய போலீஸ் அதிகாரி வினய் திவாரி தான்,  விகாஸ் துபேவுக்கு கைது நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்ததாக வந்த சந்தேகத்தின்பேரில் காவல் அதிகாரி வினய் திவாரி நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து விகாஸ் தப்பி செல்வதற்கு முன்பாக அங்கிருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளையும் அழித்துவிட்டு சென்றுள்ளான்.

* மின்தடை ஏற்படுத்திய 2 பேர் கைது
போலீசார் விகாஸ் துபேவை கைது செய்ய சென்றபோது பிக்ரு கிராமத்தில் இரவில் மின் தடை செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மின்வாரிய மண்டல அதிகாரி மற்றும் துணை மின் நிலைய ஊழியர் ஒருவரையையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : partner ,Rudy Vikas Dubey ,policemen ,UP , UP, 8 policemen shot dead, Rowdy Vikas Dubey, partner
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்