கட்டணம் அதிகம் என்ற பேச்சுக்கே இடமில்லை: கோவை சத்யன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர்

கொரோனா காலத்தில் கூட தடை இல்லா மின்சாரத்தை அதிமுக அரசு உறுதிபடுத்தியுள்ளது. அண்டை மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் என்று அனைவருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மின்துறை ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக அளித்துள்ளது. மின்துறையில் கட்டமைப்பு, பகிர்மானம் என்று இரண்டு பிரிவு உள்ளது. கற்றாலை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் மூலம் கிடைக்கும் மின்சாரம் பகிர்மான பிரிவில் உள்ளது. மார்ச் மாதம் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீடு வீடாக சென்று கணக்கு எடுக்க முடியாத நிலை எற்பட்டது. இதனால் முந்திய மாத கணக்கீட்டை பொதுமக்கள் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜனவரி பிப்ரவரி மாதம் கட்டிய கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.

ஆனால் இதை அளவு பயன்பாடு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருக்காது. சாதராண நாட்களில் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை விட வெளியில் காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அதிகம் தேவைப்படும். கோடை காலத்தில் அனைவரின் மின் பயன்பாடும் அதிகரிக்கும். ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்த காரணத்தில் மின்சார பயன்பாடு அதிகரித்துதான் இருக்கும். மார்ச், ஏப்ரல்,மே, ஜூன் என்று நான்கு மாத கால கணக்கீட்டை எடுத்து அதை இரண்டு மாதமாக பிரித்து அதற்கான கட்டணம் கணக்கீடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏற்கனவே மார்ச் மாதம் கட்டிய தொகை கழித்து மீதத் தொகை கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக பொதுமக்கள் பயன்படுத்திய கணக்கீடு மட்டுமே மீட்டரில் காட்டும். அதற்கான தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்யப்பட்டு இரண்டு மாதங்களாக பிரித்து அளிக்கப்படுகிறது. இதில் அதிகம் வருகிறது அல்லது குறைவாக வருகிறது என்ற பேச்சுக்கு இடம் இல்லை. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

முன்பாக பழைய கட்டணத்தை கட்டலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற காலத்தில் பொதுமக்கள் முந்தைய ஆண்டு இந்த காலத்தில் கட்டிய கணக்கீட்டை எடுத்து பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் அவர்களுக்கு தெளிவு கிடைத்து விடும். அதிகம் கட்டணம் போடுவதற்கான வாய்ப்புகளே இல்லை. யூனிட் அதிகம் குறித்து கொடுத்தால் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அடிப்படை புரியாமல் சில அரசியல் சாயத்தில் இந்த மின் கட்டண அரசியல் செய்யப்படுகிறது. பல்வேறு பிரச்னைகளை போல் இதுவும் அரசியல் செய்வதற்கு எதிர் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு. மின்சார துறை இது தொடர்பாக  தெளிவாக பேட்டி அளித்துள்ளார். மின் கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்று மின்சார துறை தெளிவாக அறிக்கையும் அளித்துள்ளார். நான்கு மாதங்களாக பொதுமக்கள் பயன்படுத்திய கணக்கீடு மட்டுமே மீட்டரில் காட்டும்.  இதில் அதிகம் வருகிறது அல்லது குறைவாக வருகிறது என்ற பேச்சுக்கு இடம் இல்லை.

* தாறுமாறான கட்டணம் போட்டது முறைகேடானது: செ.பால் பர்ணபாஸ், தலைவர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலரும் வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். வீட்டு தேவைகளுக்கு கூட அவர்களிடம் பணம் இல்லை; எல்லா பணமும் கரைந்து விட்டது; பிஎப் பணமும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது; இனி  எங்கும் அவர்களால் பணத்துக்காக போக முடியாது; வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் கஷ்டங்களை அரசு கவனிக்க வேண்டும்; முக்கியமாக வீட்டு வாடகையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், வசூலிக்க கூடாது என்று அரசு உத்தரவிட வற்புறுத்தப்பட்டது. ஆனால் அந்த விஷயத்தில் அரசு நம்மை குழப்பிவிட்டது. சரியான தீர்வில்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 60 சதவீதம் மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அதுவும் வீட்டின் உரிமையாளர்கள் சிலர் மின் கட்டணத்தை அரசைவிட அதிகப்பட்சமாக ரூ.8 என வசூலிக்ககூடிய நிலையிலான வீடுகளில் வசித்து வருகின்றனர். தற்போது மின் கட்டணம் சரியான முறையில் கணக்கீடு செய்யாததாலும் பலர் ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பல பணக்காரர்களே மின் கட்டணம் அதிகரித்து விட்டதாக புலம்புவதும், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதும் கவனிக்கத்தக்கது; கொரோனா நேரத்தில் சலுகையை அறிவித்து விட்டு, மாறாக மின் வாரியம் தாறுமாறாக கட்டணத்தை நிர்ணயித்து கண்டபடி கட்டணத்தை போடுவது முறைகேடான செயல் என்று மக்கள் கொதிக்கிறார்கள். பணக்காரர்களே  இப்படி புலம்பினால், வருமானம் இல்லாமல் வாடகை வீட்டில் குடியுள்ள மக்கள் நிலை என்னாவக இருக்கும். வீட்டின் உரிமையாளர்கள், வாடகையை கூட பிறகு கொடுங்கள் முதலில் மின் கட்டணத்தை கொடு என்று நிர்பந்திப்பதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிலர் மின் கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டை காலி செய்யும் நிலைக்கு வந்துள்ளனர். அரசு இதுபோன்ற முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தாமால், ஆயிரம் கொடுப்பது, இலவச ரேஷன் கொடுப்பது என்றே உள்ளனர். இந்த ஆயிரம் ரூபாயையும், இலவச அரிசியையும் மட்டும் வைத்து மக்கள் என்ன செய்ய முடியும், எப்படி வாழ்ந்துவிட முடியும். நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கஷ்டப்படும் மக்களுக்கு அரசு என்ன செய்து இருக்க வேண்டும். மின் கட்டணத்தில் ஒரு ஸ்லாபாக எல்லாம் ஒரு ரூ.500 செலுத்துங்கள் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். வருமானமே இல்லாத சூழ்நிலையில், திடீரென அதிக யூனிட்டுகளை போட்டு, மக்கள் இதுவரை செலுத்தாத கட்டணத்தை கட்டுங்கள் என்றால் என்ன செய்வார்கள், தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எந்த பண பரிவர்த்தனையும் கிடையாது, அடகு வைத்து சாப்பிட கூட கடை கிடையாது. இப்படிபட்ட நிலையில், கட்டணத்தை திணித்தால் மக்கள் என்ன செய்வார்கள். கொரோனா காலத்தில் மின் கட்டணம் மக்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரிய சுமை.

இந்த முறை மின் கணக்கு எப்படி எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எதையும் தெளிவாக கூற மறுக்கிறார்கள். மின் கணக்கு கணக்கீட்டாளர்கள், வீடுகளுக்கு சென்று மின் அளவை குறிப்பிட செய்ய வேண்டும். இதேபோல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். அரசு கொரோனா காலத்தில் மின் கட்டணத்தை முழுமையாக ஏற்க வேண்டும். இல்லையென்றால் 50 சதவீதம் மானியமாகவாவது வழங்க வேண்டும். அல்லது 100 யூனிட் இலவசத்தை கொரோனா காலகட்டத்தில் 200 யூனிட் இலவசமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனால் பலருக்கு பலன் கிடைக்கும். வீட்டின் உரிமையாளர்கள், வாடகையை கூட பிறகு கொடுங்கள் முதலில் மின் கட்டணத்தை கொடு என்று நிர்பந்திப்பதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: