கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திய ரத்த மாதிரி, மருத்துவ கழிவுகள் கடற்கரையில் வீசப்படும் அவலம்: நோய் தொற்று பரவும் அபாயம்

திருவொற்றியூர்: கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திய ரத்த மாதிரி, ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் திருவொற்றியூர் கடற்கரையில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா சிறப்பு வார்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள், நோய் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களின் முகக்கவசம், கவச உடைகள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் வெளியேற்றி அழிக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவ கழிவுகளை சாதாரண குப்பையோடு சேர்த்து எடுத்து சென்று, கிடங்குகளில் போடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், கிருமி நாசினி தெளித்த பாலீத்தீன் பையில் போட்டு தனியாக எடுத்து சென்று, அழிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்களது முகக்கவசம் மற்றும் கவச உடைகளை பாதுகாப்பற்ற முறையில் சாலையில் வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில், கொரோனாவால் இறந்தவரின் உடலை புழல் பகுதி மயானத்தில் அடக்கம் செய்த மாநகராட்சி ஊழியர், தனது கவச உடையை சாலையில் வீசிவிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கொரோனா ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள் கட்டிடத்துக்கு பின்புறம் வீசி ஏறியப்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் சமீபத்தில் இறந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் திருவொற்றியூர் கடற்கரையில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரை பகுதியில் நேற்று மீனவர்கள் சிலர் நடந்து சென்றபோது அங்கு, கொரோனோ வைரஸ் பரிசோதனைக்கு பயன்படுத்திய ரத்த மாதிரிகள், பயன்படுத்திய ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் குவிந்து கிடந்தன. அவை, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டு கடற்கரையில் சிதறி கிடந்தன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், அவற்றை பாதுகாப்பாக அகற்ற உத்தரவிட்டு சென்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவ கழிவுகளை தனியாக சேகரித்து, அதை நவீன தொழில்நுட்பத்துடன் அழிக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட தனியார் நிறுவனம் இதை முறைப்படி செய்வதில்லை. மருத்துவ கழிவுகளை எந்த காரணம் கொண்டும் சாதாரண குப்பையுடன் சேர்த்து அகற்ற கூடாது, என மாசு கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறி இங்கு மருத்துவ கழிவுகள் கொட்டியது யார் என்பது தெரியவில்லை. கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திய ரத்த மாதிரிகள் கூட கடற்கரையில் கொட்டப்பட்டுள்ளது. இவை கடலில் கலந்துள்ளதால், மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இங்கு வரும் பொதுமக்கள் யாராவது இதை எடுத்தால், அவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: