×

மருத்துவர்கள் ஓய்வூதிய குறைப்பை கைவிட வேண்டும்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள்,  தலைமை மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத்தை அரசே குறைக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. அரசு மருத்துவர்கள் அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்காக 2009ம் ஆண்டில் தொடங்கி 2017ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தினர். அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தலாம் என்று உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கண்டிப்புடன் ஆணையிட்ட பிறகு தான் 2018ல் ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட்டது.

அதுகுறித்த அரசாணையை அப்போது பிறப்பித்தது அப்போதைய நிதித்துறை செயலர் சண்முகம் தான். இப்போது அந்த அரசாணையை ரத்து செய்யப்போவதாக தீர்மானித்திருப்பது தலைமைச் செயலாளர் சண்முகம் தான். எந்த காரணமுமே இல்லாமல் நிதித்துறை செயலராக பிறப்பித்த அரசாணையை தலைமைச் செயலாளராக அவரே ரத்து செய்வது எந்த வகையில் நியாயம்? நிதிநெருக்கடியை சமாளிப்பதற்காக ஓய்வூதியக் குறைப்பாக இருந்தாலும், ஊதியக் குறைப்பாக இருந்தாலும் அது அனைத்து துறை பணியாளர்களுக்கும் ஒன்றாகத் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு அதன் பணியாளர்களிடம் பாகுபாடு காட்டுவது ஏற்க முடியாததாகும். மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். 70, 80 வயதைக் கடந்த மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

Tags : Doctors , Doctors, pension reduction, drop
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை