போதை நகரமாக மாறி வரும் கோயில் நகரம்: கஞ்சா விற்பனை அமோகம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்: திவ்ய தலங்களில் ஒன்றான கோயில் நகரமாக விளங்கும் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், தற்போது கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதால், போதை நகரமாக மாறி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் திருவள்ளூரில் எழுந்தருளி உள்ளார். இதனால், கோயில் நகரம் என்ற பெருமை அடைந்த திருவள்ளூர், தற்போது கஞ்சா விற்பனை செய்யும் போதை நகரமாக மாறி விட்டதாக, சமூக ஆர்வலர்களும், ஆன்மிகர்களும் ஆதங்கப்படுகின்றனர். அந்தளவிற்கு, நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மூலை, முடுக்குகளில் எல்லாம், கஞ்சா பொட்டலங்கள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன.

தமிழகம் முழுவதும், சப்ளை செய்யப்படும் கஞ்சா, ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூருக்கும் வருகிறது. அதுவும் மொத்தமாக அனுப்பாமல், சில்லரையாக, பொட்டலங்களில் மடிக்கப்பட்டே அனுப்பப்படுகிறது. இதுகுறித்து, கஞ்சா விற்பனையை நன்கு அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: ஆந்திர மாநிலம், நகரி மண்டலத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கஞ்சா விற்பனை சத்தமின்றி கனஜோராக நடக்கிறது. கஞ்சாவை, 10 கிராம், 20 கிராம் என பொட்டலங்களில் மடித்து விற்பனை செய்கின்றனர். அதை பைக்குகளில் திருவள்ளூர், திருத்தணி பகுதிகளுக்கு வந்து, இங்குள்ள வியாபாரிகளிடம் சேர்க்கின்றனர். இவ்வாறு கொண்டு வரப்படும் கஞ்சா, திருவள்ளூர் ரயில் நிலையம், பஸ் நிலையம் பின்புறம் ஏரிக்கரை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை களை கட்டுகிறது.

இவர்களிடம், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் வந்து, கஞ்சா வாங்கி, தங்கள் எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர் என்றார். இவ்வாறு திருவள்ளூரில் நடந்து வரும் கஞ்சா விற்பனையை, போலீசார் கண்டும், காணாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை, கூண்டோடு பிடிக்க வேண்டும். அவர்களுக்கு துணைபோகும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள்

ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை, 10 கிராம், 20 கிராம் என, பொட்டலங்களாக கட்டி, தமிழக - ஆந்திர மாநில எல்லையான நகரி பகுதியில், சிலருக்கு சப்ளை செய்யப்படுகிறது. பின், திருத்தணி மற்றும் எல்லையோர கிராமங்களில் உள்ள சிலர் வழியாக, கஞ்சா திருவள்ளூருக்கு வந்து விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் கஞ்சா பாக்கெட், ரூ.100, 20 கிராம் கஞ்சா பாக்கெட் ரூ.200 என விற்கப்படுகிறது. கஞ்சா உபயோகிக்கும் பெரும்பாலான இளைஞர்கள், சிகரெட்டில் கஞ்சா துாள்களை சேர்த்து உபயோகிப்பதால், ஆறு முதல், எட்டு மணி நேரம் வரை போதை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மதுபானங்களை விட, கஞ்சாவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற காவல் நிலைய பகுதிகளில், பல்வேறு வழக்குகளில் மர்ம நபர்கள் பிடிபடும்போது, பெரும்பாலானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

* மனநலம் பாதிக்கும்

அரசு மருத்துவர்கள் கூறுகையில், கஞ்சா அடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர், கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா போதையால், மன ரீதியாக பாதிப்புகள் வரும். அதனால் குழப்பம் ஏற்படுவதுடன், எந்த வேலையையும் செய்ய தோன்றாது. பசி இருக்காது என்பதால், உடல் ரீதியான பாதிப்புகள் அதிகரிக்கும். புகையிலை பயன்படுத்தி, கஞ்சா அடிப்பதால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories: