நாள்தோறும் புதிய உச்சம் தொடும் கொரோனா நகராட்சியில் ஒரே நாளில் 75 பேருக்கு தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சியில் ஒரே நாளில் 75 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை 2404 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு இந்நோய் தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது .இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2550 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். நேற்று மட்டும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரைச் சேர்ந்த வெல்டர் மற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் ஆதனூரைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 30 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 75 பேருக்கும், ஒன்றியப் பகுதியில் 11 பேர், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 20 பேர், வாலாஜாபாத், குன்றத்தூரைச் சேர்ந்த தலா 5 பேர், கோவூரைச் சேர்ந்த 3 பேர், அய்யப்பன்தாங்கல், பெரிய பணிச்சேரி, சிறுகளத்தூரைச் சேர்ந்த தலா 2 பேர், மாங்காட்டைச் சேர்ந்த 9 பேர், மௌலிவாக்கம், கொலச்சேரி, பரணிபுத்தூர், நந்தம்பாக்கம், சிக்கராயபுரம், நாட்டரசன்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 30 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2550 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் 1329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories: