வீட்டில் இருந்து வேலை செய்ய போர் அடிக்குதா? வொர்கேஷன் போங்க... இயற்கையை ரசித்தபடி கடமை ஆற்றலாம்

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஐடி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு லேப்டாப், கணினி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணி செய்து வருகின்றனர். எங்கு சென்றாலும் அவற்றுடன் செல்லலாம். எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. வேலை செய்கிறோமா என்பது மட்டுமே நிறுவனங்களுக்கு இப்போது அவசியமாகும். கடந்த 3 மாதங்களாக வீடுகளிலேயே நான்கு அறைகளுக்குள் இருந்து லேப்டாப், கணினி என காலத்தை கழித்த பலர் அன்லாக்-1 க்கு பிறகு குறைந்த தூரத்தில் உள்ள இடங்களுக்கு தங்களது லேப்டாப்புடன் இடம்பெயர்ந்து வருகின்றனர். குளிரான வானிலை மற்றும் மலையேற்றம், மீன் பிடித்தல் மற்றும் பைக் ஓட்டுதல் உள்ளிட்ட வசதிகள் உள்ள இடங்களாக தேர்வு செய்து செல்லத்தொடங்கி உள்ளனர்.  

இதுபோன்ற வசதி ‘வொர்கேஷன்’ மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அதிகம் உள்ளது. இங்குள்ள விடுமுறை கால இல்லங்கள் சுகாதாரம், டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்டவற்றை அதிகரிக்க அதிகம் உழைத்துள்ளன. எனவே அங்கு செல்பவர்கள் அமைதியான சூழலில் இயற்கை சூழ்ந்த சூழலில் நிம்மதியாக பணியாற்ற முடியும். நோய் தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் இருந்து வரவில்லை, உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை மற்றும் பயண விவரம் உள்ளிட்டவற்றை சமர்பித்து இந்த இல்லங்களில் தங்கி கொள்ளலாம். மார்க்கெட்டிங் நிறுவனத்தை சேர்ந்த சிஇஓ சந்தோஷ் மேனன் என்பவர் கூறுகையில், ‘‘ஊரடங்கு காரணமாக காலவரையின்றி வீடுகளுக்குள்ளேயே அடைந்திருந்து பணியாற்றுவதில் இருந்து விடுபட நினைக்கிறேன். நானும் எனது மனைவியும் அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட மும்பையில் இருந்து வெளியேறி கொடைக்கானலில் உள்ள பங்களாவில் குடியேற உள்ளோம்,’’ என்றார்.   

தற்போது வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு வைபை என்பது முதுகெலும்பு போன்றதாக செயல்படுகின்றது. முன்பெல்லாம் மக்களை பணி செய்யும் மனநிலையில் இருந்து பிரிக்க விரும்பும் வகையில். பிரபலமடைந்த பல விடுமுறை கால இல்லங்கள் தற்போது அவர்கள் இணையத்திடம் இருந்து பிரிக்காமல் இருக்கும் வகையில் பல வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. லிங்கர் ஓய்வு ப்ராப்பர்ட்டீஸ் ஊழியர் ஒருவர் கூறுகையில், “ சிக்மகளூர், பாலாம்பூர், குமோன், கோடி ஹல்லி மற்றும் கூர்க் உள்ளிட்ட இடங்களில் விடுமுறைகால இல்லங்கள் உள்ளன. இங்கு நாள் முழுவதும் ஜூம் கால்களில் பேசலாம். வைபை மற்றும் டேட்டா வேகத்தை சோதனை செய்யும் கூகுள் கிளாஸ்ரூம் உள்ளன,’ ’ என்றார். இதேபோல் கூர்க்கில் உள்ள போர்குபைன் காஸ்ட்டில் ரெசார்ட் 250 ஏக்கரில் காபி மற்றும் ஏலக்காய் தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது. டாங்கிள் மற்றும் பிராட்பேண்ட் கேபிள்கள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு  நாளைக்கு சுமார் 200 முறை இங்கு மழை பெய்யும்.

ஆனால், இங்கு பிற மாநில நிறுவன ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என அதன் இணை உரிமையாளர் அனிலா பால் தெரிவித்துள்ளார். சாப்ரான் ஸ்டேஸ் நிறுவனர் தேவேந்திர பரூல்கார் கூறுகையில், “அலிபாக் லோனோவாலா மற்றும் கர்ஜட் நிறுவனங்களுடன் ‘வொர்கேஷன்’ ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகின்றோம். வெளியில் இருந்து விடுமுறை இல்லங்களுக்கு வருவோர் வைரஸ் தொற்றுடன் வரலாம் என்பதால் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக பஞ்சாயத்தில் பேசி வருகிறோம். ஆனால், உள்ளூரில் வேலைவாய்ப்பு மோசமான நிலையில் உள்ளது என்பதை அவர்கள் அறிவார்கள்,’’ என்றார். இதுபோன்ற வொர்கேஷன்களுக்கு 10 நாட்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகலாம்.

Related Stories: