உலகளவிலான பாதிப்பில் 3வது இடம் ரஷ்யாவை முந்தியது இந்தியா: 1 மணி நேரத்திற்கு 1000 பேருக்கு தொற்று

புதுடெல்லி: உலக அளவிலான கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மணிக்கு 1000 பேர் என்ற வீதத்தில் சுமார் 25 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது. இதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 1000 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 73,165 ஆக அதிகரித்துள்ளது. அதிகமாக, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி உள்ளது. இங்கு, ஒரே நாளில் 7,074 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளான நிலையில் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 64 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் 1 லட்சத்து 7001 எண்ணிக்கையுடன் 2வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 613 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 19,268 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் அதே அளவுக்கு குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை 4 லட்சத்து 9,082 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 லட்சத்து 44,814 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மகாராஷ்டிராவில் 6,555, தமிழ்நாட்டில்4,150, டெல்லியில் 2,244 பேருக்கு நேற்று மாலை நிலவரப்படி புதிதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 6,86,114 ஆக உயர்ந்தது. இதன் மூலம், 6,80,283 பேருடன் 3வது இடத்தில் இருந்த ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

* 21 மாநிலங்களில் நல்ல முன்னேற்றம்

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘‘தற்போது தேசிய அளவில் குணமடைவோர் விகிதம் 60.77 சதவீதமாக உள்ளது. இதைகாட்டிலும் 21 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. சண்டிகரில் 85.9, லடாக்கில் 82.2, உத்தரகாண்ட்டில் 80.9, சட்டீஸ்கரில் 80.6, ராஜஸ்தானில் 80.1, மிசோரமில் 79.3 ஆகியவை முன்னணியில் உள்ளன. குஜராத்தில் 71.9, உபியில் 68.4 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: