சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை எதிரொலி போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை: பல மாவட்டங்களில் முடக்கப்பட்டது காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு அதிரடியாக தடை விதித்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு நாளில் தங்கள் கடையை அதிக நேரம் திறந்த வைத்திருந்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பிறகு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இவர்கள் இறப்புக்கு காரணம், போலீசாரும், பிரண்ட்ஸ் ஆப் போலீசாரும் போலீஸ் நிலையத்தில் அவர்களை விடிய விடிய சித்ரவதை செய்து தாக்கியுள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இதுகுறித்து பலர் கருத்து தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் குரல் கொடுக்க தொடங்கினர். இந்த சம்பவம் உண்மை என்பதற்கு வலுவான சாட்சியாக சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் தலைமைக் காவலர் ரேவதி, மாஜிஸ்திரேட் முன்பாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

போலீசாரின் இந்த கொடூர கொலை குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை, விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீசார் முத்துராஜ், முருகன் ஆகியோரை கைது செய்தனர். வியாபாரிகளை போலீஸ் நிலையத்தில் தாக்கிய சம்பவத்தில் போலீசாருடன் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. வியாபாரிகள் இறந்த நாளில் இவர்கள் நான்கு பேரும் தலைமறைவாகிவிட்டனர். அதனால் அவர்களை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் முயன்ற போது அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் அவர்கள் நான்கு பேரின் போட்டோக்கள் வைரலாக சமூக வலைதளங்களில் வெளியானதை வைத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

பிரண்ட்ஸ் ஆப் போலீசார் என்பவர்கள் போலீசாருடன் இணைந்து செயல்படும் போது, பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே நட்பு வளரும் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆனால், சாத்தான்குளம் சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பிரண்ட்ஸ் ஆப் போலீசார் மீது பொதுமக்கள் தரப்பில் இருந்து நிறைய புகார்கள் வருகின்றன. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள், தற்போது பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், விழித்துக் கொண்ட சில மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், அதிரடியாக களத்தில் இறங்கி, பிரண்ட்ஸ் ஆப் போலீசார் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். மேலும் பொதுமக்களை மிரட்டுவோர், மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வோர், கோபப்பட்டு பேசுவோர், ஆகியோரின் பெயர்களை கேட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை அடுத்து திருச்சி மாவட்டத்தில் மட்டும் 2 இன்ஸ்பெக்டர்கள், 29 எஸ்ஐக்கள், 49 போலீசார் என மொத்தம் 80 பேர் பெயர்கள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சியை அடுத்து பல மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் தற்போது தங்கள் கவனத்தை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது திருப்பியுள்ளனர்.

இதையடுத்து, சென்னை மாவட்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவிக்கும் போது, வியாபாரிகள் மற்றும் மக்களுடன் இணைந்து காவலர்களுக்கு உதவியாக இருக்கத்தான் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமூக காவல் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். போலீசாரைப் போல அதிகாரத்தை பயன்படுத்தும் எண்ணத்தோடு வருபவர்களை அனுமதிக்க மாட்டோம். சட்டத்தை மீறி பிரண்ட்ஸ் ஆப் போலீசில் உள்ளவர்கள் போலீசார் போல செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரண்ட்ஸ் ஆப் போலீசாரை பணியில் ஈடுபடுத்துவது  குறித்து அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் முடிவு செய்யலாம் என்று டிஜிபி திரிபாதி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட்டார். அதை தொடர்ந்து திருச்சி, மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்பட 11 மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் உடனடியாக களத்தில் இறங்கி, பிரண்ட்ஸ் ஆப் போலீசார் காவல் துறையுடன் இணைந்து செயல்படுவதற்கு தடை விதித்துள்ளனர். இதுகுறித்து, திருச்சி டிஐஜி அளித்த பேட்டியின்போது, பிரண்ட்ஸ் ஆப் போலீசார் குறித்து வந்த சர்ச்சைகளை அடுத்து அவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.

அதேபோல பிரண்ட்ஸ் ஆப் போலீசார் பணிக்கு வர வேண்டாம் என்று என்றும், அந்தந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவிட்டனர். இதுகுறித்து அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு பிரண்ட்ஸ் ஆப் போலீசார் தடை செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையில் கடந்த 1993ம் ஆண்டில்தான், தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள பிரதீப் வி பிலிப் என்பவர்தான் இந்த பிரண்ட்ஸ் ஆப்போலீசை அறிமுகம் செய்து வைத்தவர். பின்னர் மாநிலம் முழுவதும் பிரண்ட்ஸ் போலீஸ் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மீது அவ்வப்போது புகார் வந்து கொண்டுதான் இருந்தது. தற்போது சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து பிரண்ட்ஸ் ஆப் போலீசார் மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 16 ஆண்டுகள் போலீசாருடன் இணைந்து பணியாற்றிய இவர்கள் இனி பொதுவெளிக்கு வருவது சந்தேகம். பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே நட்பு வளரும் என்ற அடிப்படையில் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் செயல் விபரீதமாக மாறவே இப்போது தடை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: