நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை: அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம்?

* தமிழகம் உட்பட புதியதாக தேர்வான சில எம்பிக்களுக்கு வாய்ப்பு

* கொரோனா தளர்வுக்கு பின்னர் ெடல்லி அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி: கொரோனா தளர்வுகளை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கக் கூடும் என்றும், தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் புதியதாக தேர்வான சில எம்பிக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்க உள்ளதால் ெடல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மாநிலங்களவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம், காங்கிரஸை விட ஒரு மடங்கு உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 55 இடங்களில் இதுவரை, பாஜக 17 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் 9 இடங்கள், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், திமுக,  அதிமுக ஆகியவை தலா 3 இடங்கள், பிஜூ ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை  தலா 4 இடங்கள், என்சிபி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், டிஆர்எஸ் ஆகியவை தலா 2  இடங்கள், மற்ற கட்சிகள் மற்ற இடங்களைப் பிடித்துள்ளன என்று மாநிலங்களவை  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றிக் கணக்கிட்டால் காங்கிரசுக்கு 41 எம்பிக்கள், பாஜகவுக்கு 86 எம்பிக்கள் பலம் மாநிலங்களவையில் இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் மாநிலங்களவையிலும் எந்த மசோதாவையும் நிறைவேற்றுவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எந்தவிதமான சிரமமும் இருக்கப்போவதில்லை.

 

மக்களவையில் ஏற்கெனவே மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இருக்கிறது. இப்போது மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 101 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் உள்ளனர். 245 எம்பிக்கள் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு 123 எம்பிக்கள் தேவை. அந்த வகையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (6 எம்பிக்கள்), ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் (9 எம்பிக்கள்), அதிமுக (9 எம்பிக்கள்) ஆகியோர் ஆதரித்தாலே எந்த மசோதாவையும் நிறைவேற்றிட முடியும். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மொத்தம் 65 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.

ஒருவழியாக மாநிலங்களவை தேர்தல் முடிந்த நிலையில், சீன எல்லை விவகாரம், கொரோனா பரவல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை  உடனே கூட்ட வேண்டுமென காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், டில்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் எம்பிக்களை சமூக விலகலோடு அமர வைப்பது, நாடாளுமன்ற இரு அவைகளின் இடப்பற்றாக்குறை ஆகிய காரணங்களால் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இருந்தும் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், எம்பிக்களுக்கான இடவசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆறு மாத இடைவெளிக்குள் கூட்ட வேண்டுமென்பது விதி. அந்த வகையில், வருகிற  செப்டம்பர் 22ம் தேதிக்குள் சபைகளை கூட்டவேண்டும். மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து, அடுத்த ஒரு சில வாரங்களில் முழுமையான விடை தெரிந்துவிடும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் புதியதாக ேதர்வு செய்யப்பட்ட சிலருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது குறித்து டெல்லியில் கடந்த வாரம் நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடியை மூத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சிலர், பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் சந்தித்தனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் யாரும் பங்ேகற்கவில்லை. இந்த சந்திப்பால் வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் மத்திய அமைச்சரவையில் மறுசீரமைப்பு நடக்கும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதியதாக அமைச்சரவையில் வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்டவர்களை சேர்க்க பிரதமர் மோடி விரும்புவதாகவும், சில அமைச்சர்கள் மட்டுமே மாற்றப்படுவார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அவ்வாறு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமானால் காங்கிரஸ் கட்சின் முன்னாள் இளம் தலைவரும், தற்போது பாஜக-வில் இணைந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஜோதிராதித்யா சிந்தியா, தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல், ஒரு சில மூத்த அமைச்சர்களின் இலாகா மாற்றம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10ம் தேதி நிலைக்குழு கூட்டம்

நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் கூட்டங்களை நடத்துவதற்கான விதிமுறைகளை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டு உள்ளது. அதில், கொரோனா பரவல் காரணமாக மழைக்கால கூட்டத் தொடரை துவங்குவது தாமதமாகியுள்ளது. முதல் கட்டமாக நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 24 நிலைக்குழுக்களின் கூட்டத்தையும் நாடாளுமன்ற கட்டடம் மற்றம் அதன் இணைப்பு கட்டடத்தில் உள்ள ஒன்பது அறைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கூட்டம் நடக்கும் அறையில், 6 அடி இடைவெளியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க வேண்டும். கூட்டத்தில் அச்சடிக்கப்பட்ட பேப்பர்கள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது.

மாறாக அனைத்தும், ‘லேப்டாப்’பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூட்டத்தில் உறுப்பினர்களை தவிர வேறு எவரும் பங்கேற்க கூடாது. அதிகாரிகள் யாராவது பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர்கள் விரும்பினால், அவர்கள் கூட்டம் நடக்கும் அறையின் வாயிலில் தான் அமர்ந்திருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 10ம் தேதி கூடி கொரோனா விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: