தெலுங்கானாவில் பிறந்தநாள் நிகழ்ச்சி மூலம் பரவிய கொரோனா: மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி

ஐதராபாத்: தெலுங்கானாவில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு வைர வியாபாரிகள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த நிலையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,462ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 283 பேர் உயிரிழந்தனர். 11,537 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தை அடுத்த ஹிமாயத் நகரை சேர்ந்த 63 வயதாகும் வைர வியாபாரி ஒருவர், இரு வாரங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அதில் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள், உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விருந்து நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு வைர வியாபாரிக்கு கொரோனா தொற்று அறிகுறி தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வைர வியாபாரி கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரை தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் மற்றொரு வைர வியாபாரியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல்வாதி உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் பல்வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: