காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடந்தது

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி நேற்று பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. காரைக்கால் அம்மையார்  கோயிலில் மாங்கனி திருவிழா ஒரு மாதம் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு நாடெங்கும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையொட்டி, மாங்கனி திருவிழா கடந்த 1ம் தேதி மாலை கைலாசநாதர் கோயில் உள்ளேயே மாப்பிள்ளை அழைப்பு  நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 2ம் தேதி காலை காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை ஸ்ரீ பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக சுவாமி வீதியுலா வரும்போது பக்தர்கள் வீட்டு மாடிகளில் நின்று மாங்கனிகளை இறைப்பார்கள். ஆனால் நேற்று இந்த மாதிரி எதுவும் நடைபெறவில்லை. ஸ்ரீ கயிலாசநாதர் கோயில் பிரகாரத்தில் பரமசிவன், பிச்சாண்டவர் கோலத்தில் பிரகார உலா சென்றார். சுவாமிக்கு மாங்கனிகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீ பிச்சாண்டவரை, காரைக்கால் அம்மையர் எதிர்கொண்டு அழைத்துச்சென்று அமுதுபடையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: