×

சின்னசேலத்தில் சாலையோரம் ஆடு வெட்டுவதை தடுக்க ரூ37 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன இறைச்சி கூடத்தை திறக்க கோரிக்கை

சின்னசேலம்: சின்னசேலத்தில் சாலையோரம் ஆடு வெட்டுவதை தடுக்க வார சந்தை இடத்தில் கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சி கூடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு ஒவ்வோரு வாரமும் வியாழன் அன்று நடக்கும் வார சந்தையில் சுமார் 25 கிராம மக்கள் கூடுவார்கள். ஆனால் இந்த சந்தைக்கு கட்டிட வசதி, குடிநீர் வசதி என்பது இல்லை. இதனால் வியாபாரிகள் தங்கள் சொந்த செலவில் தென்னங்கீற்று குடிசை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

அதைப்போல சின்னசேலம் பகுதியை பொருத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே சாலை ஓரத்தில்தான் ஆடு வெட்டி கறி விற்பனை செய்து வருகின்றனர். இது சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், ஆடு வெட்டும்போது அதை பார்க்கும் பொதுமக்கள் மிரண்டு போகின்றனர். மேலும் காலையிலேயே ரத்தம், கத்தி என பார்த்து சிறுவர்கள் மயங்கி போகின்றனர். இதனால் சின்னசேலம் சந்தை பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2016-17ல் சுமார் ரூ37 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டி, பல லட்சம் மதிப்பிலான ஆடு அறுக்கும் இயந்திரத்தை பொருத்தியது. அந்த கட்டிடம் கட்டி 3 ஆண்டுகள் ஆகிறது.

ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் வீணாகிறது.  இதனால்  ஆடு வெட்டும் வியாபாரிகள் சுமார் 13 பேர் தொடர்ந்து சாலையில்தான் கறி விற்பனை செய்கின்றனர். போதிய சுகாதாரம் இல்லை. மேலும் ஆடுகள் வெட்டுவதற்கு முன்னர் நோயில்லாத ஆடா என்பதை கால்நடை மருத்துவர் சோதித்து சான்று வழங்கிய பிறகே வெட்ட வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் எல்லாம் தற்போது பின்பற்றப்படு வது இல்லை. இதை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அலுவலர்களும் வாய்மூடி உள்ளனர். இதைப்போல கச்சிராயபாளையம், எலியத்தூர் போன்ற இடங்களில் ஆடு வெட்டுகின்றனர்.

ஆனால் அந்த ஆடுகள் உண்பதற்கு ஏற்றதா என கால்நடை மருத்துவரோ, உணவு பாதுகாப்பு அலுவலர்களோ சோதிப்பது இல்லை. இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்கும்போது அங்கு போதிய வசதிகள் இல்லை. தண்ணீர் வசதி இல்லை. கடை போடுவதற்கு ஏற்ற கட்டிட வசதி இல்லை. அதனால் அங்கு நாங்கள் போகவில்லை என்றனர். மேலும் பேரூராட்சி நிர்வாகத்திடம் அந்த நவீன இறைச்சி கூட கட்டிடம் திறக்கப்படாதது குறித்து கேட்டபோது மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறி விட்டனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் தலையிட்டு நவீன இறைச்சி கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : meat stall , Little Salem, Goat, Modern Meat
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...