நாமக்கல்லில் 5 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, கொல்லிமலை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு!!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூலிகை சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலையில் கடந்த 4 மாதங்களாக ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லாமல் பாதுகாப்பான பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில், கொல்லிமலை சீக்கு பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணியினை சுகாதார துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 4 மாதங்களாக கொரோனா பாதிப்புகள் இல்லாத பகுதியாக இருந்த கொல்லிமலையில் ஒரேபகுதியில் திடீரென 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றானது சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த கொரோனா தொற்றுக்கு முக்கிய காரணம் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களாலும், வெளிமாநிலத்திலிருந்து வந்த நபர்களாலும்தான் அதிகளவில் பரவி வருகிறது. இதனால், கொரோனா தொற்றினை தடுக்கும் முயற்சியாக கொல்லிமலைக்கு வெளிநபர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் மலை பாதைகள் அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: