காரைக்குடி வனப்பகுதியில் கொட்டப்பட்ட கெட்டுப்போன பால் பாக்கெட்கள்: விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம்

காரைக்குடி: காரைக்குடி பகுதியில் உள்ள வனப்பகுதிகள் குடிமகன்கள் சரக்கு அடிக்கும் இடமாகவும், கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவருவதாக சமூக அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி, கல்லல், சாக்கோட்டை பகுதிகளை சுற்றி வனப்பகுதிகளுக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முந்திரி, தைல மரங்கள் நடப்பட்டுள்ளன. இங்குள்ள முந்திரி காடுகளில் பல ஆயிரக்கணக்கான மான்கள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீருக்காக வெளியே வரும் போது நாய்களிடம் கடிபட்டும், வாகனங்களில் அடிபட்டும் இறந்து போவது வாடிக்கையாகி வருகிறது. தவிர ஒரு சில சமூகவிரோதிகள் மான்களை வேட்டையாடுவதாக புகார் உள்ளது.

முந்திரி மற்றும் தைல மரக்காடுகளை சுற்றி வனத்துறை வேலி அமைத்து இருந்தாலும், சமூக விரோதிகள் அதனை பிய்த்து எறிந்து விட்டு சரக்கு அடிக்கும் இடமாகவும், பலான வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரி பின்புறம் கண்டனூர் சாலையில் உள்ள முந்திரிகாட்டு பகுதிகளில் சிலர் கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனர். நேற்று இந்த வனப்பகுதியில் உள்ள முந்திரி மரங்களுக்கு கீழ் கெட்டுப்போன தனியார் பால் பாக்கெட்டுகளை சிலர் கொட்டி விட்டு சென்றுள்ளனர். இது கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருவதோடு வனவிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

காரைக்குடி ஊற்றுகள் அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், வனப்பகுதிகளை சில சமூகவிரோதிகள் தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் உலாவரும் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வனப்பகுதியை நாசமாக்கும் சமூகவிரோதிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு வனத்துறையினர் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: