மைக்ரோ நிதி நிறுவன கடன்: பழங்குடி மக்கள் பரிதவிப்பு

குன்னூர்: குன்னூர் பகுதியில் காடுகளின் மத்தியில் பழங்குடியின கிராமங்கள் உள்ளன. பெரும்பாலும் பழங்குடியின மக்கள் பலா, தேன் எடுத்தல், குருமிளகு பறித்தல்  உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிக்கு செல்லவே அச்சமடைந்துள்ளனர். இவர்களின் கிராமத்திற்குள் வெளி ஆட்களை அனுமதிப்பதில்லை. தடுப்புகளை அமைத்து தன்னார்வலர்கள் உதவியுடன்  காபி நாற்றுகள் தயாரித்து ‌தங்களது பழங்குடியின மக்களிடையே விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் மக்கள் கூறுகையில், ‘‘தற்போது ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றோம்,

வருமானம் இல்லாததால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்களை வாங்க கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகன வசதிகள் இல்லாததால் மருத்துவ தேவைக்கு குன்னூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்  மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தி வருவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கடனை திருப்பி செலுத்துவதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: