தூண்கள், சாலையில் விரிசல்; மரங்கள் முளைத்து சிதிலமடையும் காவேரி பாலத்தால் விபத்து அபாயம்: நெடுஞ்சாலைத்துறை கவனிப்பது அவசியம்

மேட்டூர்: மேட்டூர் காவேரிபாலம் மரங்கள் முளைத்து சிதிலமடைந்து வருவதால் பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே நெடுஞ்சாலைத்துறை,இதை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களின் லட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கு நீர் வார்க்கும் மேட்டூர் அணை,தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாகவும், சேலம் மாவட்டத்தின் பிரதான அடையாளமாகவும் திகழ்கிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டபோது மேட்டூரையும் சேலம் கேம்ப் மற்றும் மேட்டூர் ரயில் நிலையத்தையும் இணைப்பதற்காக காவேரிபாலம் கட்டப்பட்டது. 1928ம் ஆண்டு கட்டப்பட்ட காவேரிபாலம் 400 மீட்டர் நீளம் கொண்டது.

பதினான்கு தூண்களுடன் கட்டப்பட்ட இந்த பாலம் பொது போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேட்டூரிலிருந்து சேலம்,தர்மபுரி,பெங்களூர்,சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள்,சரக்குவாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று வந்தன. அதேபோல் சேலம்,தர்மபுரி,சென்னையிலிருந்தும் கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்தும் மேட்டூர் கோவை கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் காவேரிபாலம் வழியாக சென்றுவந்தன.பாலத்தின் இடதுபுறம் பாதசாரிகள் நடந்து செல்ல தனியாக இரும்பாலான நடைபாதையும் அமைக்கப்பட்டிருந்தது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த பாலம் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.பராமரிப்பின்றி இருந்ததால் இந்த பாலம் 1985ம் ஆண்டில் பழுதானது. இதனால் சேலம்கேம்ப்,மேட்டூர் ரயில்நிலையம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. காவேரிபாலம்வரை வரும் பொதுமக்கள் அங்கிருந்து குதிரை வண்டிமூலம் மேட்டூர் பேருந்து நிலையத்திற்கும் சதுரங்காடிக்கும் சென்று வந்தனர். அப்போது குதிரை வண்டிகள் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. பின்னர் மிகப்பெரிய மரத்துண்டுகள் போடப்பட்டு பாலம் பழுது நீக்கப்பட்டது. பாலம் வலுவிழந்ததாக கூறி கனரக வாகனப் போக்குவரத்து  தடை செய்யப்பட்டது.

பயணிகள் பேருந்து போக்குவரத்து மற்றும் இலகுரக வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.கனரக வாகனங்கள் மேட்டூர் அனல்மின்நிலைய பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.பாலத்தின் இடதுபுறமிருந்த நடைபாதை அகற்றப்பட்டது. தற்போது இந்தப்பாலத்தில் பஸ் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.இருப்பினும் இலகுரக வாகனப்போக்குவரத்தும் இருசக்கர வாகனப்போக்குவரத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதசாரிகளும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பராமரிப்பு இல்லாத காரணத்தால் பாலத்தின் பல பகுதிகளிலும் ஆலம் மற்றும் அரச மரங்கள் வளர்ந்து வருகின்றன.

தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கற்கள் சரிந்து விழும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பாலத்தின் மீது செல்லும் சாலையில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.மரங்களின் வேர்களால் தூண்களும் சேதம் அடைந்து வருகிறது.

இதுபற்றி பல்வேறு தரப்பினரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.ஆடிப்பெருக்கு காலத்தில் இந்த பாலத்தை 50 ஆயிரத்திற்கு அதிகமானோர் பயன்படுத்துவார்கள்.அப்போது பாலத்தில் ஏதேனும் விபத்து நேர்ந்தால் உயிர்சேதம் அதிக அளவில் ஏற்படும்.சேலம்கேம்ப் மற்றும் காவேரிபாலம், ஒர்க்க்ஷாப் கார்னர் பகுதிகள் தனிமை படுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் போக்குவரத்து இன்றி கடும் அவதிக்கு ஆளாவார்கள்.எனவே வரும்முன் காக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: