தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் அடிப்படை வசதியில்லாத கொரோனா சோதனை சாவடிகள்: பயணிகள் கடும் அவதி

எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்ட எல்லைகளான கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் உள்ள கொரோனா சோதனை சாவடிகளில் கழிப்பறை, தங்குமிடம் இல்லாததால் பணியாளர்கள், பயணிகள் மழை மற்றும் வெயிலில் ஒதுங்கி நிற்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் பயணிகளின் இ-பாஸ்களை சோதனை செய்வதற்காக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை விலக்கு அடுத்து ஒரு சோதனை சாவடியும், மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கிலும் ஒரு சோதனை சாவடி உள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் இ-பாஸ் உண்மை தன்மை உள்ளிட்டவற்றை காவல், வருவாய், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழு சோதனை செய்து வாகனங்களை அனுப்புகின்றனர். வேன், கார் மற்றும் பைக்கில் செல்லும் பயணிகள் அங்கு சோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இவ்வாறு காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்கி நிற்க எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை, மேலும் இ-பாசில் சில குளறுபடிகள் உள்ள பயணிகள் மணிக்கணக்காக காத்திருக்கும் நிலையில் பெண்கள் பயன்படுத்த கழிப்பறை வசதிகள் இல்லை. குடிநீரும் இல்லை.

ஏற்கனவே நெடுஞ்சாலையில் உள்ள வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் கழிப்பறை ஒன்று உள்ளது. அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ஊரடங்கு தொடரும் நிலையில் பயணிகளுக்கு தற்காலிக ஓய்வறை, மற்றும் கழிப்பறை அமைக்க வேண்டும்.  இறப்பு உள்ளிட்ட அவசர காரியங்களுக்காக செல்லும் பயணிகளை வெகுநேரம் காக்க வைக்காமல் விரைவாக சோதனை முடித்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயானத்திற்கு சென்ற உடலை திரும்ப வரவழைத்து பதிவு செய்த அதிகாரிகள்

கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலையில் கர்நாடகாவில் இருந்து விபத்தில் பலியான ஒருவரது உடல், எட்டயபுரம் அருகே உள்ள தலைக்காட்டுபுரத்திற்கு சென்றது. மேலக்கரந்தை கொரோனா சோதனைச்சாவடியில் யாரும் நிறுத்தாததால் ஆம்புலன்ஸ் தலைக்காட்டுபுரம் சென்றது. அதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து சென்னையில் இருந்து இறப்பிற்காக செல்வதாக உறவினர்கள் கூறியதையடுத்து ஆம்புலன்ஸ் கடந்து சென்றது தெரியவந்தது. இறந்தவர் உடலை திரும்ப வரவழைத்தால்தான் உங்களை விடுவோம் என கூறியதையடுத்து தலைக்காட்டுபுரம் மயானத்திற்கு சென்ற உடலை திரும்ப சோதனை சாவடிக்கு வரவழைத்து பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

தனிமைப்படுத்துவதை தவிர்க்க போலி காரணம்

சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லும் ஒரு சிலர் சொந்த ஊர்களில் தனிமைப்படுத்துவதை தவிர்ப்பதற்காக பாஸ் வாங்கும் போது திருவனந்தபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட அடுத்த மாவட்டத்திற்கு திருமணத்திற்கு செல்வதாக பாஸ் பெற்று செல்கின்றனர். தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி, எட்டயபுரம் சோதனை சாவடியில் இவற்றை காண்பித்து விட்டு தங்கள் கிராமங்களுக்கு சென்று விடுகின்றனர்.

Related Stories: