×

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பட்டுநூல் வரத்து இல்லாததால் 50ஆயிரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: வருமானம் இல்லாமல் பரிதவிப்பு

சேலம்: ஊரடங்கு காரணமாக கர்நாடகாவில் பட்டுநூல் வரத்து இல்லாததால், தமிழகத்தில் 50 ஆயிரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதிய வருமானம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இந்தியாவில்  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், அதேபோல் இந்தியாவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் வரத்து இல்லாமல் போனது. இந்த வகையில் தமிழகத்தில் பிரதான தொழிலாகவும், அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் தொழிலாகவும் பட்டு ஜவுளி உற்பத்தி உள்ளது.

தமிழகத்தில் சேலம், விருதுநகர், திருச்சி, நாமக்கல், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பில் பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், சர்ட் பீஸ் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக பட்டு வேஷ்டி உற்பத்தி இல்லாமல் போனது. வழக்கமாக தமிழகத்திற்கு தேவையான பட்டுநூலை சீனா மற்றும் கர்நாடகாதான் பூர்த்தி செய்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடகாவில் பட்டு நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீனாவில் இருந்து வழக்கமாக வரவேண்டிய பட்டு நூல் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்திய பின்னும் நெசவுக்கு சரிவர பட்டுநூல் இல்லாததால் ஆயிரக்கணக்கான பட்டு ஜவுளி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் முடங்கி, போதிய வருவாய் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.  
இது குறித்து சேலம் பட்டு ஜவுளி நெசவாளர்கள் கூறியதாவது:தமிழகத்திலேயே சேலத்தில் தான் 90 சதவீதம் பட்டு வேஷ்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 10 சதவீதம் தான் மற்ற பகுதிகளில் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு வேஷ்டிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம் உள்பட பல பகுதிகளுக்கும், இதைதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கும், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

பட்டு வேஷ்டி உற்பத்தியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 40 மீட்டர் முதல் 50 மீட்டர் கொண்ட ஒரு பாவில் 12 முதல் 15 வேஷ்டி உற்பத்தி செய்யலாம். இந்த ேவஷ்டிகள் உற்பத்தி செய்ய 15 முதல் 20 நாட்களாகும். ஒரு பாவில் வேஷ்டியாக உற்பத்தி செய்தால் ரூ4 ஆயிரம் முதல் ரூ5 ஆயிரம் கூலி கிடைக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவால் பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது. பட்டுவேஷ்டி உற்பத்தியில் தமிழகத்திற்கு தேவையான பட்டுநூலை கர்நாடகா தான் பூர்த்தி செய்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடகாவில் பட்டுநூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் விமான போக்குவரத்து இல்லாததாலும், இந்தியா-சீனா லடாக் பிரச்னையால் சீனாவில் பட்டுநூல் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பட்டு நூல் இல்லாததால் நெசவு தொழில் நடைபெறவில்லை.ஏற்கனவே பட்டு நெசவாளர்கள் சொற்ப வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வருகின்றனர். பல நாட்களாகியும் தொழில் சீரடையாததால் நெசவாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். பட்டு நூல் வராததால் மூன்று மாதத்தில் தமிழகம் முழுவதும் ரூ300 கோடிக்கு மேலாக பட்டு வேஷ்டி உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பில் உள்ள வேஷ்டிகளை விற்றதால் தான் உற்பத்தியாளர்கள் மீண்டும் உற்பத்தியை வேகப்படுத்த முன்வருவார்கள். அப்போது தான் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது இருக்கும் நிலைமை சீரடைய இன்னும் பல மாதமாகும் என்று கூறப்படுகிறது. இதனால் பட்டு நெசவாளர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பம் வறுமையில் தத்தளித்து வருகிறது. இவ்வாறு நெசவாளர்கள் கூறினர்.

ரூ300 கோடியில் தேக்கம்
‘‘ஊரடங்கு காரணமாக மாவட்டம்விட்டு மாவட்டம் கூட பட்டு வேஷ்டி சப்ளை செய்ய முடியவில்லை. மக்கள் கையிலும் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்ட வேஷ்டிகள் ₹300 கோடி மதிப்பில் தேக்கமடைந்துள்ளன. இவைகளை விற்கவே கடுமையாக போராடி வருகிறோம்’’ என்பது உற்பத்தியாளர்களின் குமுறல்.


Tags : weavers ,Karnataka ,Tamil Nadu , Karnataka, Tamil Nadu, silk and livelihood impact
× RELATED தமிழக – கர்நாடக எல்லையில் தீவிர வாகன தணிக்கை