×

மதுரை உட்பட 6 மாவட்டங்களில் வைரஸ் பரவல் வேகமெடுத்தது எப்படி?

* பலி எண்ணிக்கை உயர்வால் மக்கள் அச்சம்
* பாதிப்பை அதிகரித்ததா ‘சென்னை ரிட்டர்ன்ஸ்’

மதுரை: தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. மதுரை உட்பட 6 மாவட்டங்களில் துவக்கத்தில் மந்தமாக இருந்த வைரஸ் தொற்று, இப்போது வேகமெடுத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தமிழக நகரங்களில் கொரோனா பரவலில் சென்னைக்கு அடுத்ததாக மதுரையே பிரதானப்பட்டு நிற்கிறது. கடந்த மார்ச் 25ல் மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயது முதியவர், கொரோனாவிற்கு பலியாகி, தமிழகத்தின் முதல் உயிரிழப்பு பட்டியலில் இடம்பிடித்தார். கொரோனா தொற்றின் தீவிர கொடூர முகத்தை மதுரை மாவட்ட மக்கள் அன்றாடம் சந்தித்து வருகின்றனர். தினமும் மூன்றிலக்கம் தொட்டு, சுமார் 300 பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதும், பலி எண்ணிக்கையும் உயர்வது மக்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை பொறுத்தவரை, அரசு கொரோனா மருத்துவமனை, தோப்பூர் மருத்துவனை, ரயில்வே மருத்துவமனை, தனியார் மருத்துமவனைகளில் கொரோனா நோயாளிகளின் அன்றாட அதிகரிப்பால், படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.  தியாகராஜர் இன்ஜினியர் கல்லூரி, வேளாண்மைக்கல்லூரி, காமராஜர் பல்கலை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களிலும், கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் மே 15 வரை கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 147க்குள்தான் இருந்தது. மெல்ல அதிகரித்து மே22ல் 225க்கு உயர்ந்து, மே27ல் 245ஐத் தொட்ட கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஜூன் 10ல் 379க்கு எகிறியது. அதன் தொடர்ச்சியாக தற்போது மொத்த பாதிப்பு 3,500ஐ தாண்டி செல்கிறது. அரசு பட்டியலின்படி உயிரிழப்பு 50ஐ நெருங்கினாலும், கொரோனா வார்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது.

மதுரை வழியாக பாதிப்பு..
மதுரை  மட்டுமல்லாது, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய  மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் எகிறி வருகிறது. மதுரைக்கு அடுத்ததாக 1,100க்கு மேல் தொற்றாளர்கள் எண்ணிக்கையை நோக்கி  நகர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் 2ம் இடம் பிடித்துள்ளது. தேனி மாவட்டத்தில் 900, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் 700க்கு மேல், சிவகங்கை  மாவட்டத்தில் 400ஐ நெருங்கி வருவது ஒட்டுமொத்த 6மாவட்ட மக்களையும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்குள் ஆளாக்கியுள்ளது. 6 மாவட்டங்களில் 80 பேர் வரை பலியானதாக அரசு பட்டியல் தெரிவிக்கிற நிலையில், எண்ணிக்கை 100ஐ  தாண்டலாம் என்கின்றனர்.

நிர்வாக செயலின்மை
மதுரையில் கொரோனா தீயாய் பரவக் காரணம் என்ன என்பது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது, ‘‘மதுரையில் கொரோனா அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் மாவட்ட நிர்வாகத்தின் செயலின்மை. குறிப்பாக ஜூன் 1ல் துவங்கி ஜூன் 15வரை சோதனயை அதிகப்படுத்தாததும், சென்னை மண்டலத்திலிருந்து வந்தவர்களை சோதனைக்கு உட்படுத்தாததும் பிரதான காரணம். அப்போதே எல்லைகளை அடைக்காததும், நகரின் மார்க்கெட்களை, கடைத்தெருக்களை கண்காணிக்காததும் காரணங்களாக உள்ளன. மே30ல் தமிழக அரசாணை, சென்னை மண்டலத்திலிருந்து வருவோரை அவசியம் சோதிக்க வேண்டும் என்கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் முழுமையாக கைவிட்டது. ஜூன்4ல் துவங்கி பரிசோதனையை அதிகரித்திட தொடர்ந்து வலியுறுத்தினேன். ஜூன் 8ல் நேரில் சந்தித்தும், ஜூன்12ல் மீண்டும் கலெக்டரிடம் வலியுறுத்தினேன். ஜூன் 12க்குப்பிறகே பரிசோதனைகளை சற்று உயர்த்தினர். முன்பு அதிகபட்சமே 250 பரிசோதனைகள்தான் நடத்தப்பட்டன’’ என்றார்.

பரப்பிய பரவை மார்க்கெட்
மதுரையில் கொரோனா பரவலுக்கு மேலும் ஒரு முக்கிய காரணமாக மதுரை மார்க்கெட்கள் இருந்ததும் அறியப்படுகிறது. கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத வியாபாரிகள், பொதுமக்களால் பரவை, மாட்டுத்தாவணி மார்க்கெட்டுகள் கொரோனா பரவலுக்கான முக்கிய மையங்களாக மாறிப்போயிருக்கின்றன.  தொடர்ந்து இதுகுறித்து பேசிய எம்பி சு.வெங்கடேசன், ‘‘ஜூன் 8ம்தேதி இரவு மதுரையில் ஒரு திடீர் சர்வே நடத்தினோம். பரவை மார்க்கெட், மாட்டுத்தாவணி பழக்கடை, காய்கறி மற்றும் மீன்மார்க்கெட்கள், ரிங்ரோடு காய்கறி மார்க்கெட் ஆகிய 5 மார்க்கெட் பகுதிகளுடன்,  கீழமாசிவீதி வணிகக் கடைகளிலும் 9,800 பேரை சர்வே  செய்ததில், 32 சதவீதம் பேரே முகக்கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளி மிகக் கேள்விக்குறியாக இருந்தது. இந்த அதிர்ச்சி சர்வே முடிவுகளையும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினோம்.

சென்னை அழிவுக்கான காரணமாக கோயம்பேடு இருப்பதைப்போல், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து எண்ணற்ற வாகனங்கள் மதுரை மார்க்கெட்டுகளுக்குத்தான் வருகிறது. இதில் கூடுதல் கவனம் காட்ட எச்சரித்தும், காலதாமதத்துடனேயே நடவடிக்கைகள் இருந்தன. மதுரை தொட்டு வரும் உச்சத்தின் தீவிரத்தை அரசு உணர வேண்டும். பரிசோதனைகளை மேலும் அதிகரிப்பதுடன், காய்ச்சல் கண்டறிதல்களை நிஜ அக்கறையோடு செய்ய வேண்டும். வைரஸ் பரவும் வேகத்திற்கு இணையாக, கண்டறியும் வேகமும் இருந்தால்தான் இதனை கட்டுப்படுத்தி உயிரிழப்பை குறைக்கலாம். இஎஸ்ஐ மருத்துமனைகளை காய்ச்சல் முகாம்களாக்கி, அரசு கொரோனா மருத்துவமனைகளில் 30 சதவீத பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தி, கிராமங்களிலும் பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும்’’ என்றார்.

வந்ததும்... தளர்ந்ததும்
டெல்லி,  மும்பை, சென்னை பகுதிகளில் இருந்து தென்மாவட்டத்தினர் பலரும் மதுரைக்கு  வந்து, இங்கிருந்தே தங்கள் மாவட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இதன் மூலமும்  6 மாவட்டங்களில் பரவல் அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து  தென்மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது,   ‘‘ஆரம்பத்தில் செக்போஸ்ட்கள் வழியாகவே நகருக்குள் பலரும் நுழைந்து விட்டனர். விமான, ரயில்  நிலையங்கள் பார்க்கப்பட்ட போதும், செக்போஸ்ட்கள் கண்டுகொள்ளப்படவில்லை. வடமாநிலங்களில் இருந்தும், சென்னை பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வாகனங்களில் மதுரைக்குள் வந்து, இங்கிருந்து பிரிந்து தங்கள் மாவட்ட ஊர்களுக்கு சென்று விட்டனர். அரசு துறைகளில் சரியான  கண்காணிப்பின்றி இந்த தவறு நடந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்களில் சிலரை பரிசோதித்ததில், பலருக்கும் தொற்று உறுதியாகி இருப்பது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் தளர்வு அறிவிப்பும் பரவலுக்கு முக்கிய காரணமாகி இருக்கிறது. பொதுமக்களிடமும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி விழிப்புணர்வு குறைபாடும் உள்ளது. அரசும், பொதுமக்களும் ஒத்துழைத்தே இந்த  கொரோனாவை துரத்தலாம்’’ என்றார்.

வீடுகளுக்குள்ளும் பரவல்
தென்மாவட்ட மக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களாலேயே 6 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு செக்போஸ்ட்டில் ரத்த மாதிரி எடுத்ததும், வீடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர். ரிசல்ட் வரும்போது கொரோனா உறுதியானால் அவர்களை வீடுகளில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அதற்குள் வீடுகளில் உள்ளவர்களுக்கும் பரவி விடுகிறது. இவ்வாறு இல்லாமல் வீடுகளில் அவர்களை கட்டாய தனிமைப்படுத்த வேண்டும். அல்லது தனிமை முகாம்களுக்கு அனுப்ப வேண்டும். ரிசல்ட் வந்த பிறகே வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இதற்கு வசதியாக முகாம்களை அதிகப்படுத்தி கண்காணிக்க வேண்டும்’’ என்றனர்.

‘தேனீ’ போல பணிகள் சுறுசுறுப்பாக இல்லை

தேனியில்  பரிசோதனை முடிவுகள் தாமதமாவதே முக்கிய காரணமாக இருக்கிறது. சளி மாதிரி  எடுத்து, குறைந்தது 4 நாட்களுக்கு பிறகே முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது. பாதித்த ஒரு நபர் 50 பேர் வரை பரப்பிய பிறகே, இனம் கண்டு அவரை தனிமைப்படுத்தும் நிலை இருக்கிறது. டெல்லி, சென்னை, கேரளாவிலிருந்து  வந்தவர்களாலேயே இங்கு பரவியுள்ளது. ஏப்ரல் மாதம் 43பேர் பாதித்து, அனைவரும்  குணமடைந்து சென்றனர். ஆனாலோ மே மாதத்திலிருந்து மீண்டும் கொரோனா கொடூர  முகம் காட்டத்துவங்கி, ஜூன் ஒரே மாதத்தில் 700க்கும் மேற்பட்டோர்  பாதித்துள்ளனர்.

சிகரெட், மதுப்பழக்கம் உங்களிடம் இருக்கிறதா?
கொரோனா  மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர் தர்மராஜ் கூறும்போது, ‘‘சமூக  இடைவெளியை கடைபிடித்தாலே தொற்று பரவாது. தும்மல், இருமல் போன்ற சமயத்தில் நம்மை அறியாமல் வெளிப்படும் நீர்த்துளிகள்தான் பரவலுக்கு முக்கிய காரணம். பொறுப்புணர்வோடு நாம் நடந்து கொள்வதும் பரவலை தடுக்கும். சிகரெட், மது  பழக்கம் இருப்போர், நாட்பட்ட நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகளுக்கு நோய்  எதிர்ப்பு சக்தி குறைவு. இவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும்’’ என்றார்.

கடற்படை வீரர்களையும் விட்டு வைக்கவில்லை
ராமநாதபுரம்  மாவட்டத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடு இல்லை.  முகக்கவசம், சமூக இடைவெளி கடுகளவும் பின்பற்றப்படுவதில்லை. சந்தைகளில்  பெருகும் கூட்டமும் முக்கிய காரணம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மீதான  கண்காணிப்பு குறைபாடும், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  வந்தவர்களாலும் பரவல் அதிகரித்துள்ளது. உச்சிப்புளி ஐஎன்எஸ் கப்பற்படை  பணியாளர்கள் 35 பேர் ஒரேநாளில் பாதித்ததனர். பரமக்குடி உள்ளிட்ட ஊர்களில்  பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்
மதுரை அரசு கொரோனா மருத்துமனை டீன் சங்குமணி கூறும்போது, ‘‘மனித உயிர்களைக்  காப்பாற்ற கண்ணுக்குத் தெரியாத வைரசோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த  வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணமான முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி பேணாதது, கைகளை அடிக்கடி சோப்பால் கழுவி சுத்தப்படுத்துவது போன்ற சுய பாதுகாப்பு இல்லாததுமே முக்கிய காரணம். பல ஆயிரக்கணக்கானோர்  பாதித்துள்ள நிலையில், இங்கிருந்து 950பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்திய  மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாடு அறிவிப்புகளை அனைவரும்  பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

சிவகங்கை சீமையை சீண்டி பார்த்த மும்பை
சிவகங்கை  மாவட்டத்தில் மார்ச் மாத இறுதி முதல் ஏப்.19ம் தேதி வரை 12பேர்களே கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு, இவர்களும் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்  பிறகு சுமார் 22 நாட்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில், மே  மாதத்தில் மும்பையிலிருந்து வந்தவர்களாலும், ஜூன் மாதத்தில் சென்னையில்  இருந்து வந்தவர்களாலும் தொற்று பரவி தினமும் 60 பேர் வரை பாதிக்கப்பட்டு  வருகின்றனர்.

‘ஊர் அடங்கா’ திண்டுக்கல்
திண்டுக்கல்லில்  ஊரடங்கு இருக்கிறது. ஆனால், தளர்வுகளால் ஊரடங்காகவே இல்லை. இயல்பான வாழ்வை  மக்கள் காலை 9மணி முதல் இரவு 9மணி வரை நடத்தி வருகின்றனர். மக்கள்  நடமாட்டத்திற்கு குறைவாக இல்லை. சமூக விலகல் இல்லவே இல்லை. முகக்கவசம்  பாதிக்கும் மேற்பட்டவர்களே அணிகின்றனர். வாகனங்களிலும் கூட்டம்  அதிகமிருக்கிறது. பரிசோதனைகள் மிகமிகக்குறைவாக இருப்பதும், தொற்றாளரகளை  அதிகரித்து வருகிறது.

வைரஸ் தொற்று வருவது லேட்டு
விருதுநகர்  மாவட்டத்திற்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களுடன் சென்னையில் இருந்தும்  வந்தவர்களே தொற்று அறிவிப்பிற்கு காரணமாகி இருக்கிறது. பரிசோதனை முடிவுகள்  வெளிவர குறைந்தது 8 நாட்களாவதும், தொற்றாளர்களை அதிகரித்துள்ளது. பரிசோதனை  செய்யப்பட்டவர்கள், தாராள வலம் வந்து வைரசை பரப்பும் துரதிருஷ்ட நிலை  நிலவுகிறது. உள்ளாட்சி நிர்வாகங்களின் கிருமிநாசினி தெளித்தல், கட்டுப்படுத்த பகுதிகளில் கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து தடுப்பு  நடவடிக்கைகளிலும் குறைபாடு உள்ளது. மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் காட்டவில்லை. இப்படி பல காரணங்களால் மாவட்டத்தில்  தொற்று எண்ணிக்கை எகிறிக் கொண்டிருக்கிறது.

Tags : districts ,Madurai , Madurai, virus spread
× RELATED தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில்...