×

ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு; லடாக் பயணம் குறித்து விவாதித்ததாக தகவல்..!!

டெல்லி: ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று திடீர் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, கொரோன தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் பயணம் குறித்தும், தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி பேசியதாக குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.



Tags : Ramnath Govind ,Modi ,Ladakh ,trip , PM Modi meets President Ramnath Govind in Rashtrapati Bhavan Information on Ladakh trip
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...