தமிழகத்தில் கடந்த 3 மாதத்தில் 14 யானைகள் உயிரிழப்பு; மேட்டுப்பாளையம் அருகே வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

மேட்டுப்பாளையம்: தமிழக எல்லையான நீலகிரி வனப்பகுதியில் வாயில் காயத்துடன் மேலும் ஒரு யானை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது. அட்டப்பாடியை அடுத்த சோலையூர் பகுதியில் காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் கடந்த 2  நாட்களாக அப்பகுதியில் உள்ள மழை கிராமங்களில் சுற்றித்திரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதிகிராம மக்கள் அதற்கு சாப்பிட வாழைப்பழம் உள்ளிட்டவற்றை கொடுத்தனர். ஆனால் அந்த யானையால் எதையும் சாப்பிட  முடியவில்லை. இதனால் அந்த யானை சற்று சோர்வாக காணப்பட்டது. ஆனால் பொதுமக்கள் யாராவது அருகில் வந்தால் தாக்க முயற்சி செய்தது.

காயமடைந்து உள்ள யானை வனப்பகுதிக்குள் சிறிது தூரம் செல்வதும், மீண்டும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தமிழக கேரள எல்லையான அட்டப்பாடி சோலையூர் வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது.

தற்போது, யானை மயங்கி விழுந்து உயிரிழக்கும் பரபரப்பு வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. எதனால் யானை இறந்தது என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் உடலின் மாதிரியை பரிசோதிக்கவும்  வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் 14 யானைகள் உயிரிழந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுடுதல், உடல்நல குறைவு, உடல் உபாதை உள்ளிட்ட காரணங்களால் யானைகள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும்,  சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானைக்கு சுமார் 5 வயது இருக்கலாம். காயம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகியது போல் தெரிகிறது. ஏனெனில் புண் ஏற்பட்ட பகுதியில் தற்போது புழுக்கள் உருவாகி வெளியே வந்து கொண்டிருக்கிறது. யானை  வலியால் துடித்து கொண்டு அங்குமிங்கும் ஓடுவதால் அதற்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று வனத்துறை விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: