×

கொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் நிகழும் என அச்சப்படக்கூடாது...இதுவரை 56% பேர் குணமடைந்துள்ளனர்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், போரூரில் சிறப்பு முகாமை ஆய்வு செய்த பின் செய்யதியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இதுவரை 32,000 பேருக்கு சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் கூறுகையில், சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? எனது குறித்து பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வேறு நோய் இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா என்பது சளி, காய்ச்சல் போன்றதொரு பாதிப்பு; எனவே யாரையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டாம். நோய் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிவது அவசியம். பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சம் பேர் மருத்துவ முகாம்களில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்த அளவிலேயே உள்ளது. கொரோனா ஒழிப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்துள்ள நிலையில் இதுவரை 18 பேர் குணமடைந்துள்ளனர். காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்வதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்கள் ஒத்துழைப்பால் பல இடங்களில் தொற்று குறைந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம்.

கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் நிகழும் என அச்சப்படக்கூடாது; இதுவரை 56% பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு சுகாதாரத்துறை செயலாளர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

Tags : death ,Radhakrishnan , Chennai, Tamil Nadu, Corona, Health Secretary, Radhakrishnan
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...