மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ. பாதிப்பு: கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி..!!

கோவை: அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும், கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் எம்எல்ஏ அம்மன் அர்ஜூணனுக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, எம்எல்ஏ அம்மன் அர்ஜூணனுக்கு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அறிவித்தது. அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா  உறுதியானது. அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி, மகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதும் உறுதியானது. தற்போது அனைவரும் ராமநாதபுரம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: