கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் தவறான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், 6வது கட்டமாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு  ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,

இன்று அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், பத்திரிகைகள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக்  கடைகளும், பெட்ரோல் பங்க்குகள் இன்று ஒருநாள் இயங்கவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உட்பட முக்கிய சாலைகளில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளாக சென்று பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா என்பதை கண்காணித்து வருகின்றனர். முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: