சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி: விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை...!!!

விழுப்புரம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி  மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் சிபிசிஐடி  போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, காவல்துறையில் காவலர்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு உள்ளது. இவர்கள் காவலர்கள் கீழ் பணி  செய்வார்கள். இந்த சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உதவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை தடை செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகின்றன. இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு பதில் ஊர்காவல் படையை பயன்படுத்திக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: