×

மருத்துவமனைக்கு செல்ல போலீசார் அனுமதி மறுப்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் நடுரோட்டில் மயங்கி விழுந்தார்: வீடியோ வைரல்

திருவொற்றியூர்: கொரோனா பரவலை தடுக்க சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மருத்துவமனை மற்றும் அவசர தேவைக்கு கூட வாகனத்தில் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணலி மார்க்கெட் சந்திப்பில் நேற்று போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக பைக்கில் தனது தாயுடன் வந்த வாலிபரை ஊர்க்காவல் படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, ‘‘தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு செல்கிறேன்,’’ என அந்த வாலிபர் கூறியுள்ளனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால், அந்த வாலிபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வெகு நேரமாக வெயிலில் இருந்த அந்த பெண்மணி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.  இதை பார்த்து ஓடி வந்த பொதுமக்கள், ‘‘மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்களை மனிதாபிமானம் இல்லாமல் தடுத்து நிறுத்தி, இப்படி கொடுமை செய்யலாமா,’’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பெண்மணியை அவரது மகன் பொதுமக்கள் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். சம்பவ இடத்தில் நடந்த காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவியது.

Tags : Hospital, police, health, woman
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...