×

கொரோனா கேர் மையங்களில் சிறிய அறையில் 20 பேரை தங்கவைப்பதால் நெருக்கடி: நோய் தொற்று பரவும் அபாயம்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதித்தவர்களை அவர்களின் உடல் நிலைக்கு ஏற்றவாறு மருத்துவமனையில் அனுமதிப்பது, கொரோனா கேர் மையங்களில் அனுமதிப்பது, வீடுகளிலேயே தனிமைப்படுத்துவது என சுகாதாரத் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கொரோனா பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை கொரோனா கேர் மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை முறையாக செய்து தர வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னையில் பல இடங்களில் மேற்கண்ட வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை. மேலும், ஒரு சிறிய அறையில் 15 முதல் 20 பேர் வரை தங்க வைக்கப்படுகின்றனர்.

இதனால், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதற்கு பதிலாக அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம் அல்லது வடசென்னையில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலியாக உள்ளன. அங்கு ஒவ்வொரு அறையிலும் குறைந்தது 5 பேர் வீதம் தங்க வைக்கலாம்.ஆனால் ஆட்டு மந்தைகளை போல் தனிமை வார்டுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை உறுதி செய்வதுபோல் தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஒர் தனிமை வார்டு செயல்பட்டு வருகிறது.

தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி கல்யாணபுரம் மாநகராட்சி பள்ளியில் தனிமை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அடிப்படை வசதிகள் அறவே இல்லை என அங்கு தங்கும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது அந்த தனிமை வார்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தளத்திலும் 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் பைப்லைன் அடைப்பு காரணமாக கழிவுநீர் அங்கேயே தேங்கி நிற்கிறது.இதனால், அந்த தண்ணீரை மிதித்துகொண்டு உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன்மூலம் நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அவலம் உள்ளது. குறைந்தது ஒரு அறையில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், 20 பேர் வரை உள்ளதாக கூறப்படுகிறது.

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதில்லை. குடிநீர் உள்ளிட்ட அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து தராத பட்சத்தில், தனிமை வார்டுகளில் இருந்து மக்கள் வெளியேறும் நிலை உள்ளது. இதனால் நோய் தொற்றும் அதிகமாக பரவும். எனவே, கழிப்பறை, குடிநீர் விஷயத்தில் தனிமை வார்டில் இருப்பவர்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குளியலறை வசதி இல்லை
சென்னையில் பல பள்ளி, கல்லூரிகள் தனிமை வார்டுகளாகவும், கொரோனா  பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் கழிப்பறை வசதி மட்டுமே உள்ளது. குளியலறை வசதி இருப்பதில்லை. இதனால், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் கழிப்பறையிலேயே நின்று குளிப்பதுடன், தங்களது உடைகளையும் அங்கேயே துவைக்கின்றனர்.


Tags : Crisis ,room ,Corona Care Centers , Corona Care Centers, Small Room, Corona
× RELATED வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே