×

அனைத்து கடைகள், பெட்ரோல் பங்க் மூடல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு: வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிறு) எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு  கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று பால், மருந்து கடைகள், பத்திரிகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தேவையில்லாமல் வெளியே  சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளை முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.

ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் தவறான நடவடிக்கைகளாலும்  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ைக  அதிகரித்து வருகிறது.  சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில்  அதிகரித்து வருகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 6வது கட்டமாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக  அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இன்று அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், பத்திரிகைகள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள் உட்பட  அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் ஆணையை ஏற்று பெட்ரோல் பங்க்குகள் இன்று ஒருநாள் இயங்காது என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மருத்துவ தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும். வேறு எதற்காகவும் வெளியே  வரக்கூடாது என்று மாநில சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநிலம்  முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உட்பட முக்கிய சாலைகளில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தீவிர  கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். சென்னையை பொறுத்தவரை ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. தேவையில்லாமல் வெளியே  சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக, அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி  நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் அதனை இணைக்கும் சாலைகள் தடுப்புகள்  வைத்து அடைக்கப்படுகிறது.

மேலும், போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளாக சென்று பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா என்பதை  கண்காணிக்கவும், முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணியை முடுக்கி விட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நாளை முதல் தளர்வு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதியில் இருந்து ஜூன் 5ம் தேதி (இன்று) வரை 19 நாட்கள்  தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்றுடன் முடிந்து, நாளை இயல்புநிலை திரும்பும் என்று நினைத்த  சென்னை மக்களுக்கு, அதிர்ச்சி தரும் வகையில் மறு உத்தரவு வரும் வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு சென்னையில் நீட்டிக்கப்படும் என்று  கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்  தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.3.20 முதல் மத்திய அரசு அமல்படுத்தியதை தொடர்ந்து,  தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

இதை தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன்  31.7.20 வரை ஊரடங்கு நீட்டிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இருந்தபோதிலும் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு  ஊரடங்கு 5.7.20 வரை அமலில் இருக்க உத்தரவிட்டிருந்தேன். தற்போது, அதாவது 6.7.20 முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை  காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

* தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
* பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை  மட்டும் அனுமதிக்கப்படும். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி  வழங்கப்படும். இந்த பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுபணியாற்ற  வேண்டும்.
* காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) ஏற்கனவே அறிவித்து இருந்த  வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.
மற்ற செயல்பாடுகளை பொறுத்தவரை, 19.6.20க்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில்  அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட தடை நீடிப்பு
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த மாதம் 19ம் தேதி முன்பு ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிடலாம் என்று  அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் மட்டுமே இரவு 9 மணி வரை வழங்கப்படும்  என்று கூறப்பட்டுள்ளது. டீக்கடைகளில் உட்கார்ந்து சமூக இடைவெளியுடன் டீ குடிக்கலாம் என்று இருந்தது. தற்போது அதற்கும் தடை விதிக்கப்பட்டு,  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சலில் மட்டுமே டீ பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள் இரவு 8 மணி  வரையும் திறக்கலாம் என்று இருந்தது, தற்போது மாலை 6 மணியுடன் மூட வேண்டும்.

அதேபோன்று பெரிய கடைகள், ஷோரூம்கள் இரவு 8 மணி வரை திறக்கலாம் என்று இருந்ததை மாற்றி, மாலை 6 மணியுடன் மூட  உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்டவைகள் குறைந்த பயணிகளை கொண்டு இயங்கலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50  சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. குறைந்த பணியாளர்களை கொண்டு தொழிற்சாலைகள் இயங்கவும் 6ம் தேதி முதல்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி அடிப்படையில் இயங்கும். முடித்திருத்தகம் மற்றும் அழகு  நிலையங்கள் குளிர்சாதனங்களை பயன்படுத்தாமல், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்படலாம்.

நாளை முதல்.....
* காய்கறி, மளிகை, டீ கடைகள் (பார்சல் மட்டும்) காலை
* மணி முதல் மாலை 6 மணி வரை.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும்
பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

சாலையில் சுற்றினாலே கொரோனா பரிசோதனை
முழு ஊரடங்கை மீறி வெளியே வரும் 4 மற்றும் 2 சக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அதை ஓட்டி வருபவர்கள் மீது வழக்கும் பதிவு  செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சாலையில் தேவையில்லாமல் நடமாடுவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் போலீசார்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று  மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு வருகிற 12, 19, 26 ஆகிய தேதிகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.

Tags : shops ,Tamil Nadu , All Stores, Petrol bunk Closure, Tamil Nadu, Full Curfew
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி