×

துறைமுகங்களில் தேங்கிக்கிடக்கும் கன்டெய்னர்கள் சீனாவிலிருந்து சப்ளை தடைபட்டதால் அத்தியாவசிய மருந்து விலை உயருகிறது

* சீனாவிலிருந்து வரவேண்டிய மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் மருந்துகள் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது
மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சீனாவில் இருந்து மருந்து பொருட்கள் சப்ளை தடைபட்டதால், அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  
லடாக் எல்லைப் பிரச்னைக்கு பிறகு, பொருளாதார ரீதியாக சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சீனாவை  புறக்கணிப்போம் என அறைகூவல் விடுத்துள்ள அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு, சீனாவில் இருந்து சுமார் 3 ஆயிரம் பொருட்கள் இறக்குமதி  செய்யப்படுவதாகவும், இவற்றில் சுமார் 450 முதல் 500 பொருட்களை உள்நாட்டிலேயே எளிதாக உற்பத்தி செய்யலாம் என்றும் கூறியது.
ஆனால், உண்மையில்  மருந்து மூலப்பொருட்கள் உட்பட ஏராளமானவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

மருந்துப் பொருட்களை பொறுத்தவரை உலக அளவில் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், மருந்து மூலப் பொருட்களுக்கு  சீனாவை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. சுமார் 70 சதவீதம் மருந்து மூலப் பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக, பாராசிட்டமால், புரூபன் ஆகிய மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் 100% சீனாவில் இருந்துதான் வரவேண்டியுள்ளது. இரு நாடுகளிலும்  எடுக்கப்பட்ட தடை நடவடிக்கைகள் காரணமாக, கன்டெய்னர்கள் அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மூலப்பொருட்கள்  தட்டுப்பாட்டால் அவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்த தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் திட்டமிட்டு வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, ரத்தத்தை இலகுவாக்கும் மருந்து விலையை சுமார் 50 சதவீதம் வரை உயர்த்த இந்த ஆணையம்  அனுமதி அளிக்கும் என தெரிகிறது. ரத்தத்தை இலகுவாக்கும் ஹெப்பாரின் என்ற மருந்து கொரோனா சிகிச்சையில் மிக முக்கியமானதாக  கருதப்படுகிறது. எனவே மேற்கண்ட மருந்துகளை இருப்பு வைக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஏற்கனவே உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் மேற்கண்ட மருந்து விலையை உயர்த்தும் முடிவுக்கு விலை கட்டுப்பாட்டு ஆணையம்  தள்ளப்பட்டுள்ளது.

பிற மருந்து நிறுவனங்களும், மூலப்பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி மருந்து விலையை உயர்த்துவதற்கான அனுமதியை இந்த  ஆணையத்திடம் கோரி வருகின்றன. தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையின்படி வலி நிவாரணி, நீரிழிவு, இதய நோய் உட்பட பல்வேறு  நோய்களுக்கான மருந்துகள் மற்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்  மருந்துகள் பல அத்தியாவசிய மருந்து விலை கட்டுப்பாட்டு பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றின் விலையை நிறுவனங்களை இஷ்டத்துக்கு உயர்த்த முடியாது. இந்தச் சூழ்நிலையில், சீனாவிலிருந்து வரவேண்டிய  மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் மருந்துகள் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : China ,ports , Ports, Containers, China, Essential Medicine
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன