ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைவு: ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு: படத்தை திறந்து வைத்து மு.க‌.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைவு ஒட்டுமொத்த சென்னைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. தலைமைக் கழகத்துக்கே ஏற்பட்ட இழப்பு.  தமிழ்நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு. இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட இழப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,  காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த  சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் திருவுருவப் படத்தை, தமது இல்லத்தில் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.  அப்போது ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, சுப்புலட்சுமி  ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி., மத்திய சென்னை  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் எஸ். சுதர்சனம்,  பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும்  ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் பங்கேற்று புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். இக்காணொலிக் காட்சி  நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 காணொலி வாயிலாக, மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காலமெல்லாம் நம்மோடு இருந்து கட்சியை கம்பீரமாக ஆக்கி - தோழனாய் - வழிகாட்டியாய்  வாழ்ந்திருக்க வேண்டிய ஜெ.அன்பழகன் நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார். இது ஏதோ சென்னை மேற்கு மாவட்டத்துக்கு மட்டும்  ஏற்பட்ட இழப்பு அல்ல; ஒட்டுமொத்த சென்னைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. தலைமைக் கழகத்துக்கே ஏற்பட்ட இழப்பு. தமிழ்நாட்டுக்கே ஏற்பட்ட  இழப்பு.  ஒரு மாவட்டச் செயலாளர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடந்தவர் மட்டுமல்ல. ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படிப்  பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்தவர் மட்டுமல்ல, ஒரு சகோதரர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதற்கு  அடையாளமாகவும் இருந்தவர் ஜெ.அன்பழகன். ஒவ்வொரு நாளும் கட்சி தன்னால் வளரவேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டவர்.

1996ம் ஆண்டு லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்தார். அவர் மீண்டும் சென்னை திரும்பியபோது, விமான நிலையத்துக்கு நானே  சென்றேன். அவரை வரவேற்று அழைத்து வந்து நேராக கோபாலபுரம் சென்றோம். தலைவர் கலைஞரிடத்தில் அவரை அழைத்துச் சென்றேன். லண்டன்  சென்று தன் சொந்த மகன் சிகிச்சை பெற்று வந்ததைப் போலத் தலைவர் கலைஞர் அன்றைய தினம் மகிழ்ந்தார். இன்றைக்குத் தலைவர் கலைஞரும்  இல்லை, ஜெ.அன்பழகனும் இல்லை. இருவருமே அடுத்தடுத்து நம்மை விட்டு மறைந்துவிட்டார்கள்.  கொரோனா காலத்தில் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உதவி செய்யாமல் அனாதைகளைப் போலக் கைவிட்டபோது திமுக தான் ‘ஒன்றிணைவோம் வா’’  என்ற திட்டத்தின் மூலமாக உதவிகள் செய்யத் தொடங்கியது.

நோய்த் தொற்றைத் தடுக்கக் கூடிய உபகரணங்கள் முதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், காய்கறிகள்,  மருந்துப் பொருட்கள் கொடுத்தோம். பல்வேறு இடங்களில் உணவைத் தயாரித்தும் கொடுத்தோம். இந்தக் களப்பணியில் முன்னின்று கடமையாற்றிய  செயல்வீரர் தான் ஜெ.அன்பழகன். அவரது உடல்நிலை குறித்து நான் அறிந்த காரணத்தால், “நீ ரொம்ப அலையாதே அன்பு. வீட்டில் இருந்தபடியே  பணிகளைக் கவனி” என்று தான் சொல்லி இருந்தேன். கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கப் போராடியவர், கொரோனாவுக்கே பலியாக  வேண்டியதாகிவிட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்துவையும் நடராசனையும் இழந்தோம். இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் விருகம்பாக்கம்  அரங்கநாதனை இழந்தோம்.

என்பதைப் போல கொரோனா எதிர்ப்புப் போரில் ஜெ.அன்பழகனை இழந்தோம் என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்.

 மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டது முதல், நான் நிலைகொள்ளாமல் இருந்தேன். மருத்துவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தேன். அனைத்து  ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம். ஆனாலும் அவரால் மீளமுடியவில்லை. நம்மை மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்று விட்டார்.  ஜெ.அன்பழகன் நம்மோடு இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தோடு நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும். மறைந்த  ஜெ.அன்பழகன் உங்கள் குடும்பத் தலைவர் மட்டுமல்ல, எங்கள் அனைவர் குடும்பத்திலும் ஒருவர். ஜெ. அன்பழகனின் சிரித்த முகத்தை யாரும் மறக்க  முடியாது. அவர் சிந்திய வியர்வையும் ரத்தமும் வீண்போகாது. ஜெ.அன்பழகனின் புகழ், மங்காது; மறையாது.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: