×

கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க மத்திய நிதியமைச்சர் கூறிய 6,600 கோடி கிடைத்ததா? முதல்வர் தெளிவுபடுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

* தமிழ்நாட்டிலும் நவம்பர் வரை ரேஷன் பொருட்களை இலவசமாக தற்போது வழங்குவது போலவே வழங்கி, ஏழை, எளியவர்களுக்குச் சிறு  அளவிலாவது உதவிட வேண்டும்.

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை  மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது,   தொடர்ந்துவரும் கொரோனா ஊரடங்கு துயரத்தின் சோகத்தில் மூழ்கியிருக்கும் ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமளிப்பதாக  இருக்கிறது. மத்திய அரசே நவம்பர் மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளது.

பாஜ அரசின் சரணம் பாடும் முதல்வர் பழனிசாமியோ, ‘ஜூலை மாதத்திற்கு மட்டுமே அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவோம்’  என்று அறிவித்திருப்பது பாதிக்கப்பட்டுள்ளோரின் பரிதவிப்பை இந்த அரசு உணர மறுக்கும், மனித நேயமற்ற செயல். கொரோனா நோய் சிகிச்சைக்குத்  தேவையான வெண்டிலேட்டர், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மட்டுமே இதுவரை 6600 கோடி ரூபாய்  தமிழ்நாட்டிற்கு நிதியுதவி வழங்கியிருக்கிறோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால், கடந்த மாதம் 17ம் தேதி  அன்று பிரதமருடன் காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆலோசனையில் கூட ‘மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய 3000 கோடி ரூபாய்  சிறப்பு நிதியுதவி வேண்டும்’ என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பிற்குப் பிறகு தமிழக நிதித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் ‘கொரோனா பணிக்காக மத்திய  அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ள நிதி 1500 கோடி ரூபாய்தான் இருக்கும்’ என்று கூறி, அந்தச் செய்தி பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர், முதல்வர், தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள் ஆகிய மூவரில் யார் சொல்வது சரியான கருத்து? நிதித்துறை  அதிகாரிகளின் கருத்து சரியென்றால், மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு தவறு என்று முதல்வர் இதுவரை கூறாமல் மவுனம் காப்பது ஏன்?
 பேரிடர் நிர்வாகத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்படி நடக்கிறோம் என்று கூறும் முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டிலும் வருகின்ற நவம்பர் மாதம்  வரை நியாய விலைக் கடைகளில் இலவசமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தற்போது வழங்குவது போலவே வழங்கி, ஏழை,  எளியவர்களுக்குச் சிறு அளவிலாவது உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 கொரோனா நோய்த் தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு? மத்திய நிதியமைச்சர்  ஒதுக்கியுள்ளதாகக் கூறியுள்ள 6600 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததா இல்லையா? அப்படிக் கிடைத்திருந்தால் அந்தத் தொகைக்குக்  கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்துத் தெளிவான அறிக்கையை முதல்வர் பழனிசாமி நாட்டு மக்களின்  பார்வைக்கு உடனடியாக வைத்து, வளர்ந்து வரும் சந்தேகத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Tags : finance minister ,MK Stalin , Corona, Immunization Equipment, Union Finance Minister, CM, MK Stalin
× RELATED பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்