தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கை நிறைவேற தமிழக அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்: பாஜ தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை:  தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மிகப் பாரம்பரியமான  தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையானது, தங்களின் 7 உட்பிரிவுகளையும் உள்ளடக்கி, தேவேந்திர குல வேளாளர் என்ற  ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்பதாகும். இதற்காக பாஜ பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வந்துள்ளது. இக்கோரிக்கை சம்பந்தமாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் தங்கராஜ் அளித்த மனு, அரசு மட்டத்தில் பரிசீலனைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் டாக்டர் சுமதி  தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுப் பணி தமிழகம் முழுவதும் நடந்துள்ளது.

மானுடவியல் துறையின் ஆய்வு அறிக்கையை, 15 நாட்களுக்குள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பக் கோரி தமிழக அரசு  உத்தரவிட்டது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக நான் பதவியில் இருந்தபோது,  மதுரையில் நடந்த பத்திரிகையாளர்கள்  சந்திப்பில், தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை ஆணையம் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், மாநில அரசிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதம்  வர வேண்டுமென்றும், அன்றே நடந்த மாவட்ட ஆட்சித் தலைவருடனான கூட்டத்தில், இக்கோரிக்கை பற்றிய குறிப்புகளையும் வழங்கியுள்ளேன். மதுரையில் நடந்த எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யும்  என்று பிரதமர் பேசினார்.

இந்நிலையில் மானுடவியல் துறையின் ஆய்வு அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அறிக்கை மத்திய  அரசுக்கு கிடைத்தவுடன், மத்திய அரசு துரிதமாக நடவடிக்கையை எடுக்கும் என்பது உறுதி. தமிழ்நாட்டில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின்  நீண்ட கால கோரிக்கையானது நிறைவேறும் என்பது உறுதியாகும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: