×

8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவம்: ரவுடி கும்பல் தலைவன் வீடு தரைமட்டம்: ரகசியத்தை கசியவிட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ரவுடி கும்பல் தலைவன் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. மேலும்,  இவ்விவகாரத்தில் போலீசின் ரகசியத்தை கசியவிட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற  வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக,  கான்பூர் அருகே உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார்  சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். அப்போது போலீசார்  நடத்திய பதிலடி தாக்குதலில் 2 ரவுடிகள் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி  வருகின்றனர்.

இந்நிலையில், தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று பொக்லைன் இந்திரம் மூலம் இடித்து  தரைமட்டமாக்கப்பட்டது. அனுமதியின்றி வீடு கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படாலும் கூட, விகாஸ் துபே தனது வீட்டில்  பதுங்கு குழி அமைத்து இருப்பதாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கான்பூர் போலீஸ் ஐஜி மோஹித் அகர்வால் கூறுகையில்,  ‘விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய, 25 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. அவை மாநிலத்தின் பிற மாவட்டங்களில் தேடுதல்  சோதனை நடத்தி வருகின்றன. தூப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் கண்ட அனைத்து சாட்சிகளிடமும் எஸ்.டி.எப்.

விசாரணை அமைப்பு விசாரித்து வருகிறது. விகாஸ் துபே பற்றிய தகவல்களை தெரிவிப்போருக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தருவோரின் ரகசியம் காக்கப்படும். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஏழு போலீசார், நல்ல நிலையில் உள்ளனர். குற்றவாளிகளுக்கு  போலீசாரின் வருகை குறித்து ரகசிய தகவலை கசியவிட்டதாக சந்தேகப்படும் சவுபேப்பூர் காவல் நிலைய இன்ஸ்ெபக்டர் வினய் திவாரி இடைநீக்கம்  செய்யப்பட்டார். அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக ஆராயப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற  காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : policemen ,gang leader ,Rowdy ,Inspector , 8 Police shot dead, rowdy gang leader, house, inspector suspended
× RELATED ராமநாதபுரத்தில் காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி