கொரோனா பரவியது எப்படி? சீனாவில் அடுத்த வாரம் ஆய்வு: உலக சுகாதார அமைப்பின் குழு பயணம்

ஜெனீவா: கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அடுத்த வாரம்  சீனா செல்கிறது. சீனாவின் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி 5 லட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களை பலி  வாங்கி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வுகான் இறைச்சி சந்தையில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு  எந்த ஆதாரமும் இல்லை. வுகானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனாவும் ஒப்புக்கொள்ளவில்லை.இதற்கிடையே, இந்த வைரஸ் வுகான்  வைராலஜி ஆய்வு மையத்தில் இருந்து கசிந்திருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் குற்றம்சாட்டின.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக சீனாதான் இந்த வைரசை பரப்பியதாக குற்றம்சாட்டினார். ஆனால் அமெரிக்க படை வீரர்களிடமிருந்து தான்  கொரோனா பரவியதாக சீனா பதிலுக்கு குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து இந்த வைரஸ் பரவியது எப்படி என்பது பற்றி விசாரணை நடத்த உலக  சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது. அந்த குழு, கொரோனா  வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் முதன் முதலில் பரவியது, வவ்வால்களிடம் இருந்து மனிதர்களிடம் பரவியதா? என்பது குறித்து முழுமையாக  விசாரணை நடத்த உள்ளது.

முதலில் எச்சரித்தது சீனா அல்ல; நாங்கள்

இதற்கிடையே, கொரோனா வைரஸ் குறித்து முதலில் தகவல் வெளியிட்டது சீனா அல்ல, நாங்கள் தான் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை  வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வுகானில் வைரல் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுபற்றி ஜனவரி 1,  2ம் தேதிகளில் இருமுறை சீன மருத்துவ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்கள் ஜனவரி 3 அன்று வழங்கினர். அப்போதுதான் அவர்கள்  வைரஸ் பரவல் தொடர்பான விவரங்களை கூறியுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: