×

கேன்சரால் பாதிக்கப்பட்ட டிங்கோ கொரோனாவில் இருந்து மீண்டார்

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்  புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்தும் மீண்டுள்ளது,  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்தவர்  டிங்கோ சிங் (41).   ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆதரவற்றோர் விடுதியில் வளர்ந்தவர். இந்திய கப்பற்படையில் பணியாற்றிய இவர் ஒரு தொழில்முறை குத்துச் சண்டை வீரர் ஆவார். தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளியுள்ளார்.  1998ல் தாய்லாந்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின்  54 கிலோ எடை  பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு  பயிற்சியாளராக தனது பணியை தொடர்ந்தார்.

இவரது சேவையை பாராட்டி இந்திய அரசு 1998ம் ஆண்டு அர்ஜூனா விருதும்,  2013ம் ஆண்டு  பத்ம விருதும் வழங்கியது. 2017ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மே மாத இறுதியில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், உறுதியான மனம் கொண்ட  டிங்கோ சிங் கடந்த ஒரு மாதமாக போராடி கொரோனாவையும் வென்றுள்ளார். இடையில் ஏற்பட்ட மஞ்சள் காமாலையும் கட்டுக்குள் வந்துள்ளதாம்.மீண்டும் பரிசோதித்ததில் டிங்கோ சிங்குக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனை அவர் மனைவி பாபிதேவி ,  மணிப்பூர் முதலமைச்சர்  பிரென் சிங்  ஆகியோர் உறுதிப் படுத்தினர்.

இதுகுறித்து  டிங்கோ சிங், ‘மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு மாதமும் கொடுமையானது. எனக்கு பிறகு தொற்று ஏற்பட்டு வந்த பலர் எனக்கு முன்பே குணமாகி சென்றனர். மருத்துவமனையில் எனக்கு சோதனை செய்த 5 முறையும் கொரோனா இருப்பதைதான் காட்டியது. கடைசியில் தொற்று இல்லை என்று வந்ததும் நிம்மதியானது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராது’ என்று கூறியுள்ளார்.



Tags : Cancer, Dingo, Corona
× RELATED பிஎஸ்எல் டி20 கிரிக்கெட்; இஸ்லாமாபாத்...