சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்: காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தீவிரம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் தூத்துக்குடியில் இருந்து மதுரை சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர். இதனிடையே இவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என ஐஜி சங்கர் தெரிவித்தார். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று மாலை வரையில் அவர்கள் பேரூரணி சிறையில் இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் 5 பேரும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மதுரை மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்காக நேற்று மாலை 5.30 மணியளவில் ரூரல் டிஎஸ்பி பொன்னரசு, முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரது தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 5 பேரும் அழைத்து செல்லப்பட்டனர். இரவில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருவதாலும், மதுரை சிபிசிஐடி கோர்ட்டில் கொலை வழக்கு விசாரணை நடக்க இருப்பதாலும், அதற்கு வசதியாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காவலில் எடுத்து விசாரணை: முன்னதாக தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஐஜி சங்கர் நேற்று அளித்த பேட்டி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலம், தடயங்கள், ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம். மேலும் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னர், வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்.

 கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர், எஸ்ஐகள், போலீஸ்காரர்கள் என 5 பேரையும் இந்த வாரத்தில் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். தற்போது நடத்திய விசாரணை அடிப்படையில் கூடுதலாக யாரேனும் கைது செய்யப்படுவார்களா? என்று சொல்ல முடியாது. முழு விசாரணைக்கு பின்னரே அது தெரியும்’ என்றார். இதனிடையே இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேரையும் காவலில் எடுக்க நாளை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: