×

வீரர்கள் சுட்டதில் தமிழக மீனவர்கள் 2 பேர் பலி இத்தாலி அரசிடம் இழப்பீடு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு: தலா 100 கோடி வழங்க கோரிக்கை

நாகர்கோவில்: இத்தாலி வீரர்கள் சுட்டதில் தமிழக மீனவர்கள் இருவர் பலியான வழக்கில் அந்நாட்டு அரசிடம் இழப்பீடு பெறும்படி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தலா 100 கோடி இழப்பீடு வழங்க மீனவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.     ‘செயின்ட் ஆன்டனி’ என்ற விசைப்படகில் 11 மீனவர்கள் கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் 2012 பிப்ரவரி 15ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அவ்வழியாக வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ‘என்ரிகா லக்ஸி’ என்ற சரக்கு கப்பலில் இருந்த வீரர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டதில் குமரி மாவட்டம் இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ் பிங்கு, கேரளாவில் குடியிருந்த வரும் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ஜெலஸ்டின் ஆகிய இருவரும் பலியாகினர். மற்ற 9 மீனவர்கள் காயமடைந்தனர்.  இந்திய கடலோரக் காவல்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக இத்தாலி கப்பல் மாலுமிகளான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகிய இருவரிடமும் கொச்சியில் விசாரணை நடைபெற்றது.

இந்தியாவின் கடல் எல்லை 21 கடல் மைல் மட்டும்தான், ஆகவே இந்தத் துப்பாக்கிச் சூடு வழக்கை இந்தியா விசாரிக்க அதிகாரமில்லை என எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனு செய்தது. ஆனால், 200 கடல் மைல் வரை இந்திய எல்லை உள்ளது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதன்பின் இத்தாலி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இத்தாலி அரசு  நாடியது. அப்போது, 200 நாட்டிக்கல் மைல் வரை இந்தியாவின் சிறப்பு பொருளாதார கடல்பகுதி என்றும், இந்தியாவின் கடலுக்குள் நுழைந்து மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது குற்றம் என்றும்  கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், காயமடைந்த மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டை இந்திய அரசு, இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் ஒரு வருடத்திற்குள் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடினால்  இத்தாலி அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்படும் அல்லது வழக்கு முடிந்தது என கருதப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

100 கோடி இழப்பீடு வேண்டும்: இது தொடர்பாக தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில் கூறுகையில், பலியான மீனவர்களுக்கு தலா ₹100 கோடியும், காயப்பட்ட 9 மீனவர்களுக்கு தலா 10 கோடியும் இந்திய அரசு  இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும்.  பேச்சுவார்த்தை நடத்தும்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரதிநிதிகளையும் உட்படுத்தி உரிய நிவாரணத்தை மீனவர்களுக்கு காலதாமதமின்றி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

Tags : fishermen ,Indian ,Italy The International Court of Justice ,Italy ,Government , Soldiers, Tamil Nadu Fishermen, Italy, International Court
× RELATED தெற்கு குஜராத்தில் மூழ்கிய படகில்...