கொரோனா தொற்று பரவலால் இந்தாண்டு `உற்சாகமின்றி’ நடந்து முடிந்த நெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா: கோயில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

நெல்லை: நெல்லை நெல்லையப்பர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்தேர் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். தேரோட்ட நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுப்பர். ரதவீதிகளில் ஐந்து தேர்கள் ஓடும் காட்சியை பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்தும் தரிசிப்பர். கடந்த 500 ஆண்டுக்கும் மேலாக தடையின்றி நடந்துவந்த தேர் திருவிழா, கொரோனா என்ற பெரும் தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறவில்லை. ஆனாலும் கடந்த 23ம்தேதி முதல் கோவில் உள் பிரகாரத்தில் கும்ப பூஜை, சிறப்பு ஹோம பூஜை, உச்சிக்கால பூஜை, தீபாராதனையும், மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஷோடாசாரன தீபாராதனை நடைபெற்று வந்தது.

9ம்நாளான நேற்று தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால் டவுன் ரதவீதிகள் பக்தர்கள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது. சில பக்தர்கள் தேர் நிறுத்தப்பட்டுள்ள கூண்டு அருகில் நின்று தொட்டு வழிபட்டு சென்றனர். இந்நிலையில் 10ம் திருநாளான இன்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரியுடன் தேரோட்ட திருவிழா  இந்தாண்டு எளிமையான முறையில் முடிவுற்றது.  இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகம் மற்றும் வெளிப்பகுதியில் இன்று காலை கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

Related Stories: