×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக்கப்பட்ட ஐவரும் மதுரை சிறைக்கு மாற்றம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக்கப்பட்ட ஐவரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 எஸ்.ஐ.க்கள், 2 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பேரூரணி சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவறான செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தொடர்புடைய 5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நேர்மை மற்றும் வெளிப்படையாக சிபிசிஐடி பிரிவில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனியார் செய்தி இணையதளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரது உடம்பில் நெஞ்சுப்பகுதி, கழுத்து மற்றும் உடம்பில் பல பாகங்களில் கொடூரமாக வெட்டுக்காயங்கள் உள்ளதாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ள காயங்களோடு பிரேத பரிசோதனை மருத்துவர்களால் குறிப்பிட்டுள்ள காயங்களுடன் ஒப்பிடும்போது ஒத்துப்போகவில்லை. மேற்படி புகைப்படங்களை பார்வையிடும் போது, அவைகள் சித்தரித்து பொதுமக்களது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு அந்த தனியார் செய்தி இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு வெளியிடப்படும் செய்திகள் வழக்கின் விசாரணைக்கு தடையாக அமைந்துவிடும். இது தொடர்பாக புகார் பெறப்பட்டு சிபிசிஐடி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அந்த தனியார் செய்தி இணையதளத்தின் எடிட்டர் அவரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளனர்.

இம்மாதிரியான சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பொய்யான செய்திகளை உள்நோக்கத்துடனும் தீங்கிழைக்கும் நோக்குடனும் விருப்பு வெறுப்புகளுடன் புழக்கத்தில் பரவ விடுவதாக தெரியவருகிறது. இவ்வாறான பொய்யான தகவல்களை சமூக ஊடாகங்களில் வெளியிடுவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இவ்வாறான பதிவுகள் மற்றும் பொய்யான செய்திகளை தனி நபரோ அல்லது அமைப்புகளாலோ இணையத்தில் பகிர்ந்தால் அவற்றினை நீக்குதல் வேண்டும். இல்லை எனில் எழுதுவோர் மற்றும் வெளியீட்டாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளனர்.Tags : Sathankulam ,Son of Satan ,Madurai The Father , Action ,spread,regard , death,father ,son ,Satan
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.: எஸ்.ஐ, ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவு