உ.பி-யில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்திய நிறுவனம் ஒப்பந்தம்: சீன நிறுவனம் தகுதியிழப்பு

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் சீன நிறுவனத்தை தகுதியிழப்பு செய்து இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கான்பூர், ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்பந்தத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் 4 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பியிருந்தன. இதில் சீனாவை சேர்ந்த சி.ஆர்.ஆர்.சி நாஞ்ஜிங் புஷேன் என்ற நிறுவனமும் அடங்கும். தொழில்நுட்ப ரீதியாக தகுதியான நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளை உத்தரப்பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நேற்று ஆராய்ந்தது.

இதில் சீன நிறுவனத்தை தகுதியிழப்பு செய்த மெட்ரோ நிர்வாகம், குறைந்த கட்டணம் கோரியிருந்த பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா (BOMBARDIER) என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது. 3 பெட்டிகள் கொண்ட 67 மெட்ரோ ரயில்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் ரயிலை 65 வாரத்திற்குள் வழங்குமாறு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாம்பார்டியர் நிறுவனம் நவீன ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில்களை தனது குஜராத் ஆலையில் இருந்து தயாரித்து வழங்க இருக்கிறது.

Related Stories: