கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கொரோனா பாதிப்பு மற்றும் சாத்தான்குளம் சம்பவம்  குறித்தும் முதல்வர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரசுக்கு 1,02,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 58,378 உள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 1,385 பேர் ஆகும். இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையிடம் இந்த சந்திப்பின் போது தெரிவிக்க உள்ளதாக தெரிகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய முழுவதும் எதிரொலித்தது. இதன் காரணமாக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆளுநரை தமிழக முதல்வர் 4- ஆம் முறையாகச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: