கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்து பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் : திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி : நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம் மற்றும் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்து பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று திருப்பதி கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியக்கூடிய அர்ச்சகர், விஜிலன்ஸ் ஊழியர்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் இன்று திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, ஜுன் 8 ம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். துவக்கத்தில் தினமும் 6000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு நடத்தப்படும் கொரோனா சோதனையின் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால் இன்று வரை பக்தர்கள் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வருகிறது.ஆனாலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வர மாட்டோம்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம் மற்றும் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்து பக்தர்கள் யாரும் வரவேண்டாம். தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. திருமலையில் பணிபுரியும் ஊழியர்களை இரண்டு வாரங்களுக்கு ஒரே இடத்தில் பணி புரியும் விதமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பணி அமர்த்த கூடிய  ஊழியர்கள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அதிக அளவு பக்தர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவ சேவை நடத்திய அதனை ஆன்லைன் மூலம் பக்தர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட உள்ளது. என்றார்.

Related Stories: