ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 6,597 வாகனங்கள் பறிமுதல்; இதுவரை ரூ.16.96 கோடி அபராதம் வசூல்..: தமிழக காவல்துறை தகவல்!

சென்னை: இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது  இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. முக்கியமாக சென்னை மாநகரில் அதிகபட்ச பாதிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்த தமிழக அரசின் அறிவுரையின்படி காவல்துறை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமுடக்க உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 7,98,570 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,930 பேர் கைது செய்யப்பட்டு  விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 6,09,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,597 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 7,28,693 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 6,328 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரையில், ரூ.16,96,08,005 அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.16,95,100 வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: