நாட்டின் நலனிற்காக, தயவு செய்து லடாக் மக்கள் சொல்வதை கேளுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்..!!

டெல்லி: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி நேற்று காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள  நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி திடீரென லடாக் பயணம் மேற்கொண்ட நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். ‘சீனா எங்கள் நிலத்தை அபகரித்து விட்டது என லடாக் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி யாரும் நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்கிறார். இரண்டும் வெவ்வேறாக இருப்பதால், யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்,’ என கூறியுள்ளார். இதோடு, இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்து உள்ளதாக லடாக் பகுதியை சேர்ந்த சிலர் கூறும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, சீன ஊடுருவலுக்கு எதிராக தேசப்பற்றுள்ள லடாக் மக்கள் குரல் எழுப்புகின்றனர். லடாக் மக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். எச்சரிக்கையை புறக்கணித்தால், அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். நாட்டின் நலனிற்காக, தயவு செய்து லடாக் மக்கள் சொல்வதை கேளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: