சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு; தலைமை காவலர் முத்துராஜூக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவல்...மாவட்ட நீதிபதி உத்தரவு..!!

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு  தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மற்றொரு போலீஸ்காரரான முத்துராஜ் அப்ரூவராக மாறிதாகவும்,  சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் பரவியது.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிசிஐடி ஐஜி சங்கர் இதை மறுத்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களில் 4 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். எப்ஐஆர் என்பது முதல் தகவல் அறிக்கை மட்டும் தான். விசாரணையின் போக்கில் மேலும் குற்றவாளிகள் சேர்க்கப்படலாம். போலீஸ்காரர் முத்துராஜை தொடர்ந்து தேடி வருகிறோம்.  அவரையும் பிடித்து விடுவோம். நாங்கள் பிடித்து வைத்ததாக கூறுவது கற்பனை. அவ்வாறு பிடித்து வைக்க வேண்டிய தேவை இல்லை. யாரையும் சிபிசிஐடி போலீசார் அப்ரூவராக மாற்ற முயற்சிக்கவில்லை என்றார்.

இதற்கிடையே, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய முத்துராஜ் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து,  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி முத்துராஜ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைமை காவலர் முத்துராஜூக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டார்.  தொடர்ந்து, தலைமை காவலர் முத்துராஜை ஜூலை 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இதன் மூலம், வழக்கு தொடர்பாக ஏற்கனவே, ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 4 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 5 வது நபராக முத்துராஜ் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Related Stories: