×

செப்.13ம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை (நீட்) செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் பட்டப் படிப்புகள் மற்றும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்ததை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட் தேர்வை மாணவ, மாணவியர் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், வரும் 2020-2021ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடங்க இருந்ததால், நீட் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் 16 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுத பதிவு செய்தனர். தமிழகத்தில் இருந்து சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை நீடித்தது. அதனால் மேற்கண்ட அறிவிப்பின்படி நீட் தேர்வை மே மாதம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக நீட் தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான சூழ்நிலை இன்னும் திரும்பவில்லை. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து இறப்பு வீதமும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்துவது பெரும் ஆபத்தில் முடியும், அதனால் தேர்வை நடத்தக்கூடாது என்றும், 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துவிட்டு அகமதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை அறிவித்தது போல நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 தேர்வுமதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சிலர் மத்திய பிரதேசத்தில் இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பதில் அளிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் 3வதாக ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலைகளை ஆய்வு செய்து தனது பரிந்துரையை ஜூலை 3ம் தேதி வழங்கும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் நலன் கருதி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ம் தேதியும், நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும் நடைபெறும்.


Tags : Federal Government , On Sept. 13, NEET Examination, Adjournment, Federal Government, Announcement
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...