×

31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வழங்கியது போன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 24.3.2020 முதல் மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, அவ்வப்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் ரூ.3,280 கோடி மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது.

அதன்படி, ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவித் தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இதுதவிர, ஊரடங்கு தொடர்ந்த காரணத்தினால், மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசியும், சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப போன்றே விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க மத்திய அரசால் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பொறுத்து, கூடுதலான அரிசியும் 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின் படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலை கடைகளில், விலையின்றி வழங்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும்
நோய் தொற்று ஏற்படாத வண்ணம் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு வருகின்ற 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாய விலை கடைகளுக்கு 10ம் தேதி முதல் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தடைசெய்யபட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

* பொதுமக்கள் ஏமாற்றம்
தமிழகத்தில் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று, தமிழக அரசு கடந்த மாதம் 29ம் தேதியே அறிவித்து விட்டது. பிரதமர் மோடியும் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனாலும், இந்த மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரை கடந்த 3 நாட்களாக பொதுமக்கள் பலர் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினர். அவர்களுக்கு அரிசி மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டது. சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசு இந்த மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால், கடந்த 3 நாட்களாக ரேஷன் பொருட்களை பணம் கொடுத்து வாங்கிய பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : government announcement ,Tamil Nadu ,Tamil Nadu Government Announcement , Until 31st, the curfew is extended, in July, ration items are free, Government of Tamil Nadu
× RELATED கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட...