×

டாஸ்மாக் மதுபானம் விற்பனை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளை மே 7ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறியதால் திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனடியாக மூடுமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்; அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது. சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதில் தர வேண்டும் என உத்தரவிட்டதோடு விசாரணையை ஜூன் 6ம் ஒத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக்பூஷன், எஸ்.கே.கவுல் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் கடந்த ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்வது குறித்து அடுத்த மூன்று வாரத்தில் தமிழக அரசு அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில். தமிழகத்தில் டாஸ்மாக் சரக்கு விற்பனை விவகாரத்தில் எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை. இதில் நீதிமன்றம் வழங்கிய அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது.எனவே, இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.

Tags : Supreme Court ,Tamil Nadu , Tasmaq Brewery, Sales Affairs, Supreme Court, Govt.
× RELATED உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்...