அதிபரானதும் எச்1பி விசா ரத்து நீக்கம் இந்தியர்களுக்கு ஜோ பிடேன் ஐஸ்: முதல் நாளே செய்வதாக வாக்குறுதி

வாஷிங்டன்: ‘அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்கும் முதல் நாளே இந்தியர்களுக்கு ஆதரவான எச்1 பி விசா ரத்து நீக்கப்படும்,’ என்று ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கூறியுள்ளார். அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி, எச்4, எச்2பி மற்றும் எல்1 விசாக்களில் 5 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். இது தவிர, ஆண்டுதோறும் 3 லட்சம் இந்தியர்கள் வரை எச்1பி விசா பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். கொரோனாவால் அமெரிக்காவிலும் ஒரு கோடி பேர் வரை வேலை இழந்துள்ளனர். அவர்களுக்குவேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்காக, கடந்த மே மாதம் முதல் புதிய எச்1பி விசா வழங்குவதையும், ஜூன் மாதம் வரை விசா புதுப்பித்தலையும் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த தடையை கடந்த 23ம் தேதி அவர் டிசம்பர் வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் 2வது முறையாக போட்டியிடும் டிரம்ப்பின் இந்த அறிவிப்பை தனக்கு சாதகமாக்கும் முயற்சியில், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் இவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘காஷ்மீரில் இந்திய அரசு மனித உரிமை மீறலில் ஈடுபடக் கூடாது. சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானது,’ என கண்டித்து இருந்தார். இந்நிலையில், வாஷிங்டனில் நடந்த பிரசார கூட்டத்தில் பிடென் பேசுகையில், ‘‘நான் அதிபரானதும் முதல் நாளே, எச்1பி விசா ரத்தை நீக்குவேன். 17 லட்சம் ஆசிய அமெரிக்கர், பசிபிக் நாட்டவர் உள்பட 1.10 கோடி மக்களுக்கு குடியுரிமை வழங்கும், குடியேற்ற சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்புவேன்,’’ என்றார். இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிகளவில் ஆதரவாக உள்ளனர். இதனால், இந்தியர்களை வளைத்து போடுவதற்காகவே எச்1பி விசா விவகாரத்தில் இந்தியர்களுக்கு ஆதரவாக பிடென் பேசி இருக்கிறார்.

* இந்திய நட்புக்கு முன்னுரிமை

பிடென் மேலும் கூறுகையில், ``இந்தியா உடனான பிராந்திய நட்பு அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் முக்கியமானது. ஒபாமா ஆட்சி காலத்தில் இந்திய உறவுக்கு முன்னுரிமை அளித்து, இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட உழைத்தேன். எனது ஆட்சி காலத்திலும் இந்திய நட்புக்கு முன்னுரிமை அளிப்பேன்,’’ என்றார்.

Related Stories: